Friday, December 7, 2012

புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்

தமிழ் அச்சிடல் வரலாறு::


தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1] 

இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். 

புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது.

இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான ”தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாக கூறுகிறது  முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்;

இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.  மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. 

தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது.  சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார்.

1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்து வந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை. 

1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன.

அச்சிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாக சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677-1679 அளவில் அச்சாயின.1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களை தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.  

வேப்பேரி அச்சகம்: 

குடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge - SPCK) சென்னையின் புறநகர் வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாக செயல்பட்டது.  

முன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது.  

1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியை கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார்.

1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டி யொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விட பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவையாகும்.* Thanks to WIKIPEDIA*
படங்கள் உதவி - 4 Tamil Media.com

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.

4 comments:

  1. உங்கள் மாணவர்களுக்கு இந்த நூலகத்தை அறிமுகம் செய்து வைக்கவும்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு!!!முடிந்த வரை அறிமுகம் செய்யுங்கள்!!!நன்றி!

    ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.