Sunday, October 28, 2012

புதுக்கோட்டை ஞானாலயா நூலாலயம்! - விடுதலை தளத்தில்புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகளில்..

”முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு  நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.
                                                     
நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு  நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல.  சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.”

                                                      *  *  *  *

மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து  வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.

விடுதலை தளத்தில் கட்டுரையின் சாராம்சத்தை படித்தீர்கள். விரிவான கட்டுரைக்கு கிளிக் பண்ணுங்க

Friday, October 26, 2012

ஞானலயாவிற்கான ஸ்கேனர் முயற்சி

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக புதுக்கோட்டையில் ஒரு மருந்துக்கடை வைத்திருக்கும் லேனா என்று அழைக்கப்படும் இந்த நண்பர் ஒரு எளிய ஸ்கேனர் முன் மாதிரியைத் தானே வடிவமைத்திருக்கிறார்.

வெறும் பதினைந்து நாட்களில் ஒரு கார்பென்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு, திரு.லேனா இந்த முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்.மாதிரி ஸ்கேன்கள் நன்றாக, தெளிவாக இருக்கின்றன. இன்னமும் சில விஷயங்களை இணைக்க வேண்டும்.முக்கியமாக எல்ஈடி லைட்! இப்போது சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழ்கிற நண்பர்கள் பத்து வாட்ஸ் எல்ஈடி லைட் எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லி இந்த வேலையில் உதவ முடியும்.


                    (தான் தயாரித்த ஸ்கேனருடன் லேனா ஞானாலயாவில்..)

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக திரு லேனா வடிவமைத்துக் கொடுத்திருக்கிற ஸ்கேனரின் செயல் வடிவம் இது.Flatbed அல்லது V ஷேப் வடிவத்தில் 90-130 டிகிரி வரை சாய்வாக வைத்து ஸ்கேன் செய்யலாம். ஃபோகஸ் செய்வதற்கு உதவியாக உயரம் ஒன்றே முக்கால் அடியில் இருந்து மூன்றடி வரை வைத்துக் கொள்ள முடியும்.இங்கேயே நம்மால் செய்து காட்ட முடியும் என்பதை செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கும் திரு லேனா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!


(ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா, நூலக உதவியாளர், ஸ்கேனர் உடன்)


புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவிக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.நிதி வேண்டும்! நிதி மட்டுமே உதவாது! தகுந்த தொழில்நுட்ப உதவியும், மின்னாக்கம் செய்வதில் ஆர்வத்துடனுதவக் கூடிய நபர்களைப் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கண்டறிவது, என்று நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. திரு லேனா, ஞானாலயாவுக்கு உதவுவதில் ஒரு முன்னெட்டு என்று சொல்வதை விட, ஒரு புலிப்பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும், சாதித்துக் காட்டியிருக்கிறார்! நீங்களும் பங்கெடுத்துச் செய்யலாமே!

Wednesday, October 10, 2012

வரலாற்று நாயகர்!ஜொஹானேஸ் குட்டன்பெர்க்! அச்சு இயந்திரம் உருவான கதை

சென்ற புதன் கிழமை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில், ஞ்சைக் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில்பயிலும் மாணவர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது ப்ராஜெக்ட் கூடன்பெர்க் தளத்தில் கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக, பதிப்புரிமை பிரச்சினை இல்லாமல் பொதுவெளியில் உள்ள சுமார் நாற்பதாயிரம் புத்தகங்கள் எப்படி மின்னாக்கம் செய்யப்பட்டு எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி இருக்கிறது என்பதைச் சொன்னபோது  கூடன்பெர்க் என்ற வரலாற்று நாயகரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்க வேண்டும்! 

அந்தக் குறையை நீக்க மாணவன் என்ற வலைத்தளத்தில் நேற்று  ஒரு அருமையான விரிவான பதிவைப்பார்த்தத்தில் அவருடைய அனுமதியோடு இங்கே அந்தப்பதிவைப் பகிர்ந்து கொள்கிறோம்.ஞானாலயா வலைத்தளத்தில், ஞானாலயா ஆய்வு நூலகத்தைக் குறித்த செய்திகளை , நூலகங்கள் வாசிப்பு அனுபவங்களைக் குறித்து எழுத ஆர்வமுள்ள நண்பர்களை வரவேற்கிறோம்

தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவந்த விதத்தை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு பா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்வதை இந்தச் சுட்டியில் கேட்கலாம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த ஒலிப்பதிவில் இருக்கின்றன.

Over to மாணவன் சிலம்பு

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். 
 
பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனித குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. 
 
ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தத்தோடு  நின்று விடாமல் செயலிலும் இறங்கினார். 

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சு இயந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் 
 
அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg). 

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Manuscripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார். 


குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார். 

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
   

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.  

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .


குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

: http://urssimbu.blogspot.com/2012/10/johannes-gutenberg-historical-legends.html#ixzz28u0LAZ19

Monday, October 8, 2012

ஞானாலயா ஒரு ஒலிப்பதிவு! முதல் முயற்சி!


றிஞர்களின் அறிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட திரு மு. அருணாசலத்தின் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக இருந்த தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு இரண்டையும் பெருமுயற்சி எடுத்து வெளியிட்ட திரு உல.பாலசுப்ரமணியன், (மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்) உடன் ஞானாலயா ஆய்வு௮ நூலக நிறுவனர்  திரு பா.கிருஷ்ணமூர்த்தி.  


இந்தச் சுட்டியில் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயா, தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தது முதல், தமிழின் ஆரம்பகால நூல்கள், நூலகங்கள், முதற்பதிப்பின் அவசியம், நூலகங்களின் பயன்பாடு, நம்மிடம் வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத குறை உட்பட நிறைய விஷயங்களை ஒரு அரை மணிநேர ஒலிப்பதிவில் விரிவாகப் பேசுகிறார்.கேட்டு விட்டு, உங்கள் கருத்துக்களை அந்தப்பக்கத்தில் சொல்லுங்கள்!

தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தகங்களை நேசிக்கிறவர்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை இது. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கேளுங்கள்.

இந்த ஒலிப்பதிவை அனுப்பி வைத்து உதவிய தஞ்சை பாரத் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் மணிமாறன் & குழுவினருக்கு நன்றி.

Sunday, October 7, 2012

ஸ்வீடன் கலைஞர்களுக்குப் புரிகிறது! தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை!

..
..
கடந்த புதன்கிழமை, அதாவது மூன்றாம் தேதி திருப்பூர் பதிவர்  ஜோதிஜி புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு இரண்டாம் முறையாக வந்தபோது ஞானாலயா ஆய்வு நூலகத்தின் முகப்பில் கம்பீரமாக நிற்கும் ஒரு மண்குதிரையோடு எடுத்துக் கொண்ட படம்!இந்த மண்குதிரைக்கு ஒரு சுவாரசியமான பின்னணி, செய்தி இருக்கிறது.  
புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில், வரப்பூர், மழையூர் பகுதிகளில் (அய்யனார்) குதிரை சிலைகளை சுட்ட மண்ணில் செய்கிற கலைஞர்கள் இருப்பதையும், கால ஓட்டத்தில் அடுத்த தலை முறையினர் வேறு தொழில்களுக்குப் போய்விட, இந்த குதிரை செய்யும் கலை அருகி வருவதை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று கலைஞர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
..
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால்,புதுக்கோட்டைக்கு வந்து அருகி வரும் இந்தக் கலையைத் தெரிந்து கொள்வதற்காக கரின் டிபெர்க் என்ற பெண் அறுபத்தொன்பது வயதான கலைஞர், வெண்கலத்தில் குதிரைகளை வடிவமைப்பதில் தேர்ச்சியுள்ளவரும் கூட-அகே நோப்ளிங், அவர் மனைவி  ஈவா நோப்ளிங் ஆகிய மூவரும் இங்கே வந்து, மண்குதிரை செய்யும் கலைஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் இருந்து மண் குதிரை செய்யும் விதத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 ..
 புதுக்கோட்டை, அதன் சுற்று வட்டாரங்களின் வரலாற்றுத் தகவல்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவுடைய உதவியும் இந்தக்கலைஞர்களுக்கு இருந்திருக்கிறது என்பதைத்தனியாக சொல்ல வேண்டுமோ? அதன் நினைவாக அந்தப் பெண்மணி வடிவமைத்த டெரகோட்டா  (சுடுமண் சிற்பம்) குதிரை சிலை ஞானாலயாவில் கம்பீரமாக முகப்பில் இருக்கிறது!

முழுச் செய்தியையும் வாசிக்க இங்கே
டெரகோட்டா குதிரை ஞானலயாவுக்கு வந்த கதையையும், திருக்கோகர்ணம் பகுதியைப் பற்றியும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தில் சிவா கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.