Monday, September 10, 2012

முதற் பதிப்பின் முக்கியத்துவம்

ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:
தமிழ் மறுமலர்ச்சிக் கவிஞர்களில் முதல்வரான மகாகவி பாரதியார் 1908 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாள் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற தமது கவிதை நூலை அவரே வெளியிட்டார். அந்நூலின் 13 ஆம் பக்கம் முதல் 16 ஆம் பக்கம் வரை ‘என் மகன்’ என்ற தலைப்பில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரப்பிள்ளை இயற்றிய பாடல்கள், அவரது அனுமதியின் பேரில் பிரசுரிக்கப்பட்டது என்று உள்ளது. ‘‘என் மகன்’’ தலைப்பின்கீழ் (பாரத மாதா சொல்லுதல்) என அடைப்புக்குள் போடப்பட்டுள்ளது. அப்பாடலில் மொத்தம் 43 கண்ணிகள் உள்ளன.

‘‘சந்தோஷம்! இன்றேறுந் தன்னுரிமை வேண்டினையே
வர்தேமா தரந்தனையே வாழத்துவா யென் மகனே!
.........................................................
......................................................... (1)
எனத் தொடங்கி

என்னிடத் திலில்லா இயற்கைப் பொருளெவர்கள்
தன்னிடத்தி லுண்டதனைச் சாற்று வாயென் மகனே!

என அப்பாடல் முடிகிறது.

பாரதியார் கவிதைத் தொகுப்பில் மதுரை முத்துகுமாரப்பிள்ளையின் பாடலா? என்ன ஆச்சரியம்! இது பற்றி என் தந்தையாரிடம் கேட்டபோது அவர் சொன்னார் பாரதி தன் ‘‘ஸ்வதேச கீதங்களை’’ வெளியிடும் முன் ‘நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் தூண்டும் விதத்தில் அமைந்த பாடல்களை எழுதியவர்கள் அவற்றை தனக்கு அனுப்பினால் தனது கவிதைகளோடு அவற்றையும் சேர்த்து வெளியிடுவதாக விளம்பரம் செய்தார். அதன் விளைவே இப்பாடல். பாரதியின் பரந்த மனத்தையும் உயர்ந்த நோக்கையும் இதன் மூலம் நாம் அறிய முடிகிறது. தனது கவிதா சக்தியில் அவருக்கு எத்துனை தன்னம்பிக்கை!

முதல் பதிப்பில் காணப்படும் இப்பாடல் பின் வந்த அவரது கவிதை பதிப்புகளில் இல்லை.

பாரதியின் கவிதை மண்டலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் கவிதைகள் 1938ல் முதலில் வெளிவந்தன. வெளியிட்டவர் குஞ்சிதம் குருசாமி. தனது மகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயர் வைத்த குஞ்சிதம் அப்போது கடலூரில் பணியாற்றி வந்தார். சுயமரியாதை தம்பதியரை நேரில் சந்தித்து வாழ்த்த பாண்டிச்சேரியிலிருந்து பாரதிதாசன் கடலூர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் தான் பேசும் படங்கள் (சினிமா) திரையிடப்பட்டன. அப்போது வந்த திரைப்படங்களில் எல்லாம் பக்தி,புராணப்பாடல்களே! குஞ்சிதம் தன் மகளை வாழ்த்த வந்த பாவேந்தரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். எங்கு பார்த்தாலும் ஒரே பக்தி புராணப்பாடல்களாகவே உள்ளன. ஆகவே தமிழ் உணர்வை ஊட்டக் கூடிய ஓர் தாலாட்டுப் பாட்டு எழுதித்தாருங்கள் எனக் கேட்டார். தமிழில் தாலாட்ட ஒரு பாடலும் இல்லையே என்றவுடன் பாவேந்தர் அங்கேயே அமர்ந்து எழுதிய பாடல்தான் ‘பெண் குழந்தை தாலாட்டும்’ ‘ஆண்குழந்தை தாலாட்டும்’ என்பதாகும்.

அப்போது பாவேந்தரைப் பார்த்து தங்களின் அற்புதமான கவிதைகளை ஏன் ஓர் கவிதைத் தொகுப்பாக வெளியிடக் கூடாது எனக் குஞ்சிதம் கேட்டபோது ‘எனக்கு வசதி இல்லை’ எனப் பாவேந்தர் மறுமொழி கூற ‘நான் வேண்டுமானால் வெளியிடட்டுமா எனக் குஞ்சிதம் கேட்க’ ‘எனக்கு ஆட்சேபமில்லை’ என்றார் பாவேந்தர். அப்போது கடலூரில் வாழ்ந்த சைவசித்தாந்த பெருமன்றத்தின் செயலர் நாராயணசாமி நாயுடுவின் உதவியை நாடி தன் கருத்தை வெளியிட்டார் குஞ்சிதம். ‘

ஆத்திகப் பெரியார் மனமுவந்து நாத்திகக் கவிஞரின் கவிதைகளை வெளியிட எல்லா உதவிகளையும் செய்தார். பண உதவியும் முழுக்கவே செய்தார். இதை அறிந்த பாவேந்தர் தன் முதல் கவிதை நூலையே அவருக்கு சமர்ப்பணம் செய்தார், காரணம் இருவரையும் பிணைத்தது தமிழ் உணர்வு அல்லவா! சமர்ப்பணப் பாடலில்

நாராயணசாமி நாயுடுகார் அன்னவர்க்கே
என்நூல் சமர்ப்பித்தேன்! இன்றேக்கம் என் நூலைப்
பொன்னுலாய்ச் செய்யும் பொருட்டு

என எழுதியுள்ளார்.

முதல் பதிப்பில் பாவேந்தரின் அபூர்வ படமும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் உள்ளன. மேலும் சிறப்புரைகள் (1) தோழர் ஈ. வெ. ராமசாமியார் - குடியரசு ஆசிரியர் இரண்டு பக்க முன்னுரை (2) கனம் S. ராமநாதன் B. A. B. L - சென்னை மாகாண விளம்பர இலாகா மந்திரியார் அரை பக்க சிறப்புரை (3) ராமசாமி ஐயங்கார் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் -மூன்று பக்க பாராட்டுரை இடம் பெற்றுள்ளன.

தற்போதைய பதிப்புகளில் இவைகள் இல்லை. எடுக்கப்பட்டு விட்டன. என்ன காரணம்?

பாவேந்தருக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அழியாப்புகழை என்றும் தரும் கவிதை நூல் ‘‘அழகின் சிரிப்பு’’ இது உலகம் சுற்றிய தமிழர் A.K. செட்டியார் தூண்டுதலினால் எழுதப்பட்டு அவரது குமரிமலரின் முதல் இதழில் ஏப்ரல் 1943ல் வெளிவந்தது. அழகின் சிரிப்பில் ‘‘சிற்றூர்’’ என்ற தலைப்பில் உள்ள கவிதையில் 5ஆவது விருத்தம்

வெற்றித் தோட்டம் கண்டேன்
மேற்சென்றேன் நான் கடந்து
முற்றிய குலைப் பழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
வற்றிய மக்காள் வாரீர்
என்றது வாழைத் தோட்டம்
சிற்றேடு கையில் ஏந்தி
ஒரு காணிப் பருத்தி தேற்ற
ஒற்றை ஆள் நீர்இ றைத்தான்
உழைப் பொன்றே செல்வம் என்பான்


‘சிற்றூர் என்ற தலைப்பில் வந்த மொத்த பாடல்கள் பத்து. ஐந்தாவது விருத்தத்தில் 5 அடிகள் உள்ளன. இது யாப்பை மீறியதல்லவா. 4 அடிகள் தானே வரவேண்டும். 1979ல் எங்கள் வீட்டிற்கு A.K. செட்டியார் வந்த போது இதுபற்றி கேட்டேன். அவர் சொன்னார் ‘‘வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. நீதான் முதன் முதலில் இக்கேள்வியைக் கேட்கிறாய் எனக்கூறி விளக்கம் சொன்னார்.’’ கவிஞனின் உணர்ச்சிக்குத் தடைபோட நான் யார்-? அவர் எழுதியதில் கை வைக்க எனக்கு உரிமை இல்லை. ஆகவே அப்படியே போட்டேன்’’ என்றார்.

01.01.1944ல் முல்லை முத்தையா ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டபோது இவ்வரிகள் இருந்தன. பின் வந்த பதிப்புகளில் முதல் அடி எடுக்கப்பட்டுவிட்டது.

இன்று எல்லோரும் போற்றும் அண்ணா எதையும் ஒரு பின்னனியோடு விரிவாக எழுதி வாசகனை அச்சூழலுக்குத் தயார் செய்து, பொருளுக்கு வருவார். நேரடியாக எதையும் தொடங்கமாட்டார். அண்ணா எழுதிய ‘‘மக்கள் கரமும் மன்னவர் சிரமும்’’ அவர் நடத்திய திராவிட நாடு வார ஏட்டில் தொடராக வந்தது. காஞ்சிபுரத்திலுள்ள ‘பரிமளம் பதிப்பகம்’ 1968ல் அதை நூலாக வெளியிட்டது. அண்ணாவே பதிப்புரை எழுதியுள்ளார். அப்போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர். நூலின் மொத்த பக்கங்கள் 129. பின்னால் 1981ல் புத்தகமாக வெளிவந்த போது 49 பக்கங்கள் மட்டுமே இருக்கின்றன.  

1969ல் வெளிவந்த முதல் பதிப்பில் 5ஆம் பக்கம் முதல் 77ஆம் பக்கம் வரை இருந்த 73 பக்கங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. புரட்சி தோன்றக் காரணமும் மக்கள் எழுச்சியும் 77 பக்கங்களில் அண்ணாவால் விரிவாக எழுதப்பட்டு பக்கம் 78ல் புரட்சி வெடித்தது’ எனத் தொடங்கும். இப்போதுள்ள பதிப்புகளில் பக்கம் 78லிருந்து பக்கம் 129 வரை மட்டுமே உள்ளன. அண்ணாவின் நூலுக்கே இக்கதி என்றால் மற்றவர்களின் நூல்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படுபவரும் சங்கத் தமிழ் இலக்கியங்களைக் கண்டெடுத்துப் பதிப்பித்து வழங்கிய வருமான உ.வே.சாமிநாதய்யர் ஐம்பெருங்காப்பியங்களில் முதல் காப்பியமான நூல், சீவக சிந்தாமணியை 1887ல் வெளியிட்டார். மூன்றாவதான மணிமேகலையை 1898 இல் வெளிக் கொணர்ந்தார்.

அந்நூலின் முதல் பக்கத்தில் பாலவனத்தம் ஜமீன்தாரவர்களாகிய இராமநாதபுரம் மகா&-ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ பாண்டித் துரைத் தேவர் அவர்கள் உதவியைக் கொண்டு மேற்படி சாமிநாதய்யரால் சென்னை வெ. நா. ஸ்ரீலிபி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன என்ற விஷயம் அச்சிடப்பட்டு இருக்கும். பொதுவாக அக்காலப் பதிப்புகளில் நூல் எழுத உதவியவர், நூலாசிரியர், அச்சிட்ட அச்சுக்கூடம் ஆண்டு போன்ற விபரங்கள் முதல் பக்கத்திலேயே அச்சாக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக அரியபல வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அண்மை காலங்களில் இதுபோன்ற விஷயங்கள் அடுத்தமறுபதிப்பில் எடுக்கப்பட்டுவிடுகின்றன.


உ.வே.சா மணிமேகலைக் காவியத்தைப் பதிப்பிக்கும் போது அவருக்கு பல ஐயங்கள் எழுந்தன. பௌத்தம் பற்றிய முழமையான விபரம் தெரியாத காரணத்தால் தன்னுடன் பணியாற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் உதவியை நாடினார். இலண்டன் பாலி மொழிக் கழகத்தோடு தொடர்பு கொண்டு அவர்கள் வெளியிட்ட நூல்களை வருவித்து ஆங்கிலப் பேராசிரியர்களைக் கொண்டு அவற்றை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டு தன் ஐயங்களைப் போக்கிக் கொண்டார். பின்னர் மணிமேகலையைப் பதிப்பித்தார். பௌத்தம் பற்றிய மூல வரலாறு தனக்குத் தெரியாததால் ஏற்பட்ட இடர்பாடுகளை உணர்ந்த அய்யரவர்கள் வாசகர்களுக்கு உதவும் பொருட்டு ‘‘புத்த சரித்திரம் (48 பக்கங்கள்) பௌத்த தருமம் (39 பக்கங்கள்) பௌத்த சங்கம் (19 பக்கங்கள்) என்ற தலைப்புகளில் மொத்தம் 106 பக்கங்கள் விளக்கங்கள் எழுதியுள்ளார்.

அபிதான விளக்கம் 16 பக்கங்கள், மணிமேகலைக் கதைச் சுருக்கம் 56 பக்கங்கள், மணிமேகலைக் நூலாசிரியர் மதுரைக் கூளவாணிகன் சீத்தலை சாத்தனாருடைய வரலாறு என எல்லாம் எழுதியுள்ளார். ஆனால் தற்போதுள்ள பதிப்புகளில் இவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. தனிநூலாக வெளியிட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். மணிமேகலைக் காவியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளத்தானே அய்யர் அவற்றை எல்லாம் எழுதினார். எதற்காக அவற்றை எடுக்க வேண்டும். முதல் மூன்று பதிப்புகளில் வந்த இப்பகுதிகளை இப்போது ஏன் நீக்க வேண்டும். ஆகவே முதல் பதிப்பைத் தேட வேண்டியதாகிறது.

இந்தியாவில் அரசோச்சிய ஆங்கிலேயர்கள் 1835ல்தான் அச்சகங்களைத் தொடங்குவதற்கும், புத்தகங்களை வெளியிடுவதற்குமான உரிமையை நம்மவர்களுக்கு அளித்தனர். எனவே தமிழ்நூல் பதிப்பக வரலாற்றுக்கு வயது 177 ஆண்டுகளே ஆகிறது. இக்காலக் கட்டத்தில் வெளிவந்த தினசரி பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், தனிப்பட்ட நூல்கள் அனைத்தும் கொண்ட நூலகம் ஒன்று இன்றுவரை அமைக்கப்படவில்லை. ஆகவே அத்தகைய நூலகம் ஒன்றை விரைவில் உருவாக்குவது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

Credits and Thanks to  Sandhya Publications Website

http://www.sandhyapublications.com/vaasipparai.aspx

3 comments:

 1. உங்கள் அக்கறைக்கு நன்றி. சில நாட்களுக்கு முன்பு மும்மையில் தமிழ் பள்ளிக்கூடங்கள் 7 வது வரைக்கும் தான் இருக்கிறது. அதற்கு மேலே எவரும் படிப்பதில்லை. வேலைக்குச் சென்று விடுவார்கள் என்று சொன்ன தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்த போது நம்முடைய செம்மொழி மக்களை நினைத்துக் கொண்டேன். நிச்சயம் செம்மொழி நாயகன் நினைத்திருந்தால் இது போன்ற எத்தனையோ உருப்படியான விசயத்திற்கு பணம் செலவழித்து இருக்க முடியும்.

  ReplyDelete
 2. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

  ReplyDelete
 3. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.