Monday, July 9, 2012

ஞானாலயாவுக்கு உதவுவதும் காலத்தின் குரல்தான்!இந்தவாரம்-கலாரசிகன் பகுதியில் நேற்றைய (08-07-2012) தினமணி நாளிதழில் நின்று போன கணையாழி மீண்டும் தொடங்கிய கதையில் ஆரம்பித்து, மார்க்சீயத் திறனாய்வாளரும்,சிறந்த எழுத்தாளருமான தி.க.சிவசங்கரன்  மிகுந்த அபிமானத்தோடு தி க சி என்றழைக்கப் படுகிறவருடைய  கட்டுரைகள் அத்தனையையும் தொகுத்து  காலத்தின் குரல் என்ற தலைப்பில் கவிஞர் முத்துக்குமார் ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார் என்ற செய்தியோடு, தி.க.சியின் கட்டுரைகளைப் பல இடங்களிலும் தேடிக் கிடைக்காத நிலையில், புதுக்கோட்டை ஞானாலயாவில் அத்தனை கட்டுரைகளும் கிடைத்ததைத் தன்னுடைய முன்னுரையில் திரு முத்துக் குமார் குறிப்பிட்டிருப்பதாகவும் ஒரு செய்தி இருக்கிறது.

ஞானாலயா ஆய்வு நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்கள் இருக்கின்றன. அதை நடத்தியவர்களிடமே  பிரதி ஏதுமில்லாத நிலையில்,ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும், வாசகர்களுக்கும், மறுபதிப்பு செய்ய விரும்பும் பதிப்பகங்களுக்கும் இன்றியமையாத துணையாக ஞானாலயா திரு.பா.கிருஷ்ணமூர்த்தி இருந்து வருகிறார். 


ஞானாலயா ஆய்வு நூலகத்தின் தேவை, அவசியம் என்ன, அதைப் பாதுகாப்பதற்கான அவசியம், அவசரம் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக கலாரசிகனுடைய இந்த செய்திக் கட்டுரையின் பகுதி இருக்கிறது!


இனி அந்தக் கட்டுரையின் அந்தக் குறிப்பிட்ட பகுதி இங்கே!  

முழுக்கட்டுரையும் இங்கே 


"கணையாழி' இதழ் பற்றிக் குறிப்பிட்ட கையோடு, அடுத்த செய்தி. "கணையாழி' இதழில் 1999-ஆம் ஆண்டில் தி.க.சி. எழுதி வந்த கட்டுரைகளை, கவிஞர் முத்துக்குமார் "காலத்தின் குரல்' என்ற பெயரில் தொகுத்திருக்கிறார். 

இதற்கு முன்னால், "தி.க.சி. நேர்காணல்கள்' என்கிற தொகுப்பிற்காகக் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இந்தக் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி கிடைத்ததாகவும், பிறகு புதுக்கோட்டை "ஞானாலயா' ஆய்வு நூலகத்தின் உதவியுடன் எல்லா கட்டுரைகளும் கிடைக்கப் பெற்றதாகவும் தன்னுரையில் குறிப்பிடுகிறார் முத்துக்குமார்.  

நம்மிடையே வாழும் பத்திரிகை உலக ஜாம்பவான் தி.க.சி. அவரைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்கும் தகுதி அனுபவத்தாலும், பங்களிப்பாலும் நம்மில் யாருக்கும் கிடையாது என்பது எனது தேர்ந்த முடிவு. இலக்கிய உலகின் கிரியா ஊக்கியாகக் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்.

நிஜமாகவே அவரது கருத்துகள் காலத்தின் குரல்தான்! கல்கி, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, "சரஸ்வதி' விஜயபாஸ்கரன், "தினமணி' டி.எஸ். சொக்கலிங்கம், கவிஞர் கே.சி.எம். அருணாசலம், சிட்டி, வல்லிக்கண்ணன்,  சுந்தர ராமசாமி என்று இலக்கிய உலக முன்னோடிகள் பலருடனும் உலவும் உணர்வைத் தந்தது "காலத்தின் குரல்' தொகுப்பு.  ÷காலத்தின் குரல், காலா காலமாகக் கேட்டுக் கொண்டே இருக்கப் போகும் ஓர் இலக்கியவாதியின் குரல்!" என்று அந்த செய்தி ஒரு முத்தாய்ப்புடன் முடிகிறது!

இந்த ஒரு தொகுப்பு மட்டுமல்ல, இதைப்போன்ற நிறையப் படைப்புக்களையும், படைப்பாளி, பதிப்பகம், வெளிவந்த காலச் சூழல், வாசகர்களிடம் இருந்த வரவேற்பு இப்படி எல்லாத்தகவல்களையும் ஒருசேரத் தன்னகத்தே கொண்டிருக்கிற ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு உதவிக் கரங்கள் நீட்டுவதும், 

ஞானாலயா திரு கிருஷ்ண மூர்த்தியிடம் இருக்கிற வாய்மொழி சரித்திரத்தையும் ஆவணப்படுத்த வேண்டியதும், பாதுகாப்பதும் கூட காலத்தின் குரலாக, வரலாற்றுப் பிரக்ஞையாக இருக்கிறதே! 

No comments:

Post a Comment

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.