Thursday, June 28, 2012

ஞானாலயா - அனுப்வம்

திரு சுந்தரராமன் அவர்களின் வலைப் பக்கங்களில் இருந்து...!

புதுக்கோட்டையில் எனக்குத்தெரிந்த நண்பரின் நண்பர் கூப்பிட்டு, நான் சொல்லும் முகவரிக்கு வாருங்கள். கொஞ்சம் கம்ப்யூட்டர் வேலை இருக்கிறது என்றார். நானும் என் வீட்டுக்கு இரண்டு தெரு தள்ளி இருக்கும் அந்த வீட்டுக்குப்போனபின், பிரமித்துப்போனேன். அந்த வீடு முழுவதும் புத்தகங்கள்! வரிசைக்கிரமமாக அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு நூலகம்போல் இருந்தது. அப்புறம்தான் உறைத்தது.அது ஞானாலயா! தமிழகத்தின் தனிச்சிறப்பு மிக்க தனியார் நூலகம்.! புதுக்கோட்டையின் பெருமைகளில் முக்கியமானது! இன்றைய தமிழ் அறிஞர்களும், எழுத்தாளர்களும் வந்துபோகும் கோவில்! அந்த நூலகம் எங்கள் பகுதியில்தான் இருக்கிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் அப்புறம் போய்க்கொள்ளலாம் என்று மூன்று ஆண்டுகளை ஓட்டிவிட்டேன். ( அதற்காக இன்றும் வருந்திக்கொண்டிருக்கிறேன் ). ஆனால் இப்போது நான் ஞானாலயாவின் செல்லப்பிள்ளை! :)
அதன் நிறுவனர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி மற்றும் டோரதி கிருஷ்ணமூர்த்தி தம்பதியர். அவர் பள்ளி தலைமை ஆசிரியராய் இருந்தவர். திருமதி டோரதி அவர்கள் கல்லூரி முதல்வராய் இருந்தவர். இருவரும் பணி ஓய்வு பெற்று விட்டு ஞானாலயாவை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள்.

திரு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உடலாலும், அறிவாலும், உள்ளத்தாலும் அளவிடமுடியா உயரமானவர்! மனிதர்களை நேசிப்பவர். நேர்மையை சுவாசிப்பவர். ஒரு செய்தியின் அடி ஆழம்வரை சென்று அலசுபவர்! அங்கு வரும் ஆர்வலர்களுக்கு முகம் கோணாமல் விபரங்களை அள்ளித்தருபவர். அவர் விளக்கம் சொல்லாமல் ஒரு புத்தகத்தை படிப்பது உப்பில்லாப்பண்டம் உண்பதைப்போல! அவர் ஒரு நூலகர் அல்ல.! நல்ல வாசகர்! நீங்கள் எந்த தமிழ்ப்புத்தகம் தேடிக்கொண்டிருந்தாலும் இங்கு இருக்கும் சாத்தியம் அதிகம்! மேலும் அதைப்பற்றிய பின்னணித் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்.

திருமதி.டோரதி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அன்பான தாய் மற்றும் அறிவுசால் ஆசான்! கணவரின் எல்லாச்செயல்களிலும் துணை நின்று ஒரு நல்ல ஆலோசகராகவும் திகழ்பவர்! மிகவும் அற்புதமாகச் சமைப்பார். (நம்மல்லாம் படிக்க போகச்சொன்னா தின்னுப்புட்டு வர்ற கூட்டம்! என்ன பண்றது? ) தவிர..மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்! அவர் எழுதி பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் கௌரவப் படுத்தப்பட்டு, விருதுகள் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நம் மத்திய, மாநில அரசுகளோ...ம்ஹூம்.. !


இங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் நூல்கள் உள்ளன. தமிழில் அரிய நூல்கள் அனைத்தும் இருக்கின்றன. நான் ஒரு எழுத்தாளர் பற்றியோ, படைப்புகள் பற்றியோ தெரிந்துகொள்ள விரும்பினால், அடுத்து போய் விழும் இடம் அதுதான். இங்கு எல்லா சிற்றிதழ்களும் ஆரம்பம் முதல் உள்ளன. இன்றும் வந்துகொண்டிருக்கின்றன. வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.டெல்லியிலிருந்து வெளிவரும் வடக்கு வாசல் இங்கு வருகிறது.பல நாடுகளிலிருந்தும் ஆராய்ச்சி மாணவர்கள் வந்து செல்கிறார்கள்.

இந்த அறிவுப்பெட்டகத்துக்கு ஒரு மாதம் அந்துருண்டை வாங்கவே அவர்களுக்கு ஒரு தொகை செலவாகிறது. மேலும் இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.! . இவர்கள் இன்றுவரை தங்கள் சொந்த ஓய்வூதியத்தையும், சேமிப்பையும் வைத்தே நூலகத்தை பராமரித்து வருகிறார்கள். ஆர்வலர்கள் நிறைய புத்தகங்களைத் தந்து குவிக்கிறார்கள். ஆனால் பொருளுதவிக்காக இப்போதுதான் மத்திய, மாநில அரசுகளிடம் திட்ட முன்வரைவு வைக்கப்பட்டுள்ளது.

நாம் ஏதாவது இந்த நூலகத்துக்குச் செய்ய வேண்டும்.! என்ன செய்யலாம்?

ஏதாவது ஒரு நல்ல நோக்கத்தோடோ, பாராட்டவோ, உதவவோ அவரைத் தொடர்பு கொள்ள விரும்பினால்.. +91 99656 33140

பதிவுக்கு நன்றி: சுரேகா http://www.surekaa.com/2010/02/blog-post_18.html

Thursday, February 18, 2010 அன்று எழுதப்பட்ட இந்தப்பதிவுக்கு வந்த பின்னூட்டங்களில் ஒன்று...

/இதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல கணிணி மயமாக்குவதும், புத்தகங்கள் அனைத்தையும் மின்புத்தகமாக மாற்றுவதும், அதை இணைய நூலகமாக்கி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்த வைப்பதும் காலத்தின் கட்டாயம்.!/

அழிந்து வரும் மரபுச் செல்வங்களைப் பாதுகாக்க,(புத்தகங்களும் இதில் அடக்கம்) தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பு கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மின்தமிழ் என்று கூகிள் க்ரூப்சில் தேடிப்பாருங்கள், இது தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் வலைக் குழுமம்.

அவர்களைத் தொடர்புகொண்டாலேயே, digigitisation of books எப்படிச் செய்வது என்பதைச் சொல்வார்கள். தவிர, தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் இருக்கும் திரு நா.கணேசன் ஞானாலயாவைப் பற்றி மின்தமிழிலும், வேறு சில வலைக் குழுமங்களிலும் பல சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அறிமுகப் படுத்திக் கொண்டிருக்கிறார். உள்ளூரிலேயே இருக்கும் பழைய மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தால், அங்கே இருக்கும் புத்தகச் செல்வங்களைக் கணினி மயமாக்கிப் பாதுகாக்க முடியும்.

இதே உதவியை, சென்னையில் பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.முக்தா வி. ஸ்ரீநிவாசன் தி.நகரில் தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கும் நூலகத்திற்கும், சென்னையில் உள்ள ஆர்வலர்கள் செய்து தரலாம்.

காப்புரிமைப் பிரச்சினையில் குறுக்கிடுவதாகவோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை ஏமாற்றும் முயற்சி அல்ல இது. பழைய, அரிய புத்தகச் செல்வங்களைப் பாதுகாக்கவும், நமக்கு அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்கவும் செய்கிற கல்வித் தெய்வத்தின் பணி இது என்பதைப் புரிந்து கொண்டு ஆர்வமுள்ளவர்கள் பங்கு கொள்ளலாம்.

அரசின் உதவியையோ, ஒத்துழைப்பையோ இதில் எதிர்பார்க்காமல், நமக்கு நாமே என்பதன் உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொண்டு செய்ய வேண்டிய அவசரமான கடமையும் இது!


6 comments:

 1. நல்ல விஷயம்.... தொடர்ந்து நடக்க என்னாலான உதவியைச் செய்ய தயார்.

  இப்போதே மின்தமிழ் பற்றிப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. நல்ல விஷயமாக இதை ஏற்றுக் கொண்டமைக்கு மிகவும் நன்றி திரு விஜயகுமார், திரு வெங்கட் நாகராஜ்!வார்த்தைகள் காரியமானால் மகிழ்ச்சியே!

  மின்தமிழ் கூகிள் வலைக் குழுமத்தில் ஞானாலயா என்று தேடினால் குறைந்த பட்சம் இருபத்தெட்டு திரி அதிகபட்சம் முப்பத்தோரு திரிகளில் ஞானாலயாவைப் பற்றிய விவாதங்கள் இருக்கும். இவையெல்லாம் குறைந்த பட்சம் இரண்டாண்டுகளுக்கு முந்தியவை, அப்படியே அமுங்கிப் போனவையும் கூட!

  பங்கு கொண்ட ஒவ்வொருவரும் ஞானாலயாவைப் பயன்படுத்திக் கொண்டதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, நாசாவில் பணிபுரியும் திரு நா. கணேசன் ஒருவரைத் தவிர வேறு எவரும் ஞானாலயாவுக்குக் கை கொடுப்பதைப் பற்றி மறந்து கூடப் பேசியதில்லை.

  இப்போது கூட மின்தமிழ் திரு நா.கண்ணனிடம், ஞானாலயா உதவிக் கரங்களை வேண்டி நிற்பதைப்பற்றி எழுதுங்கள் என்று இரண்டு மாதங்களுக்கு முன் வேண்டியது கூட இணையவெளியில் எங்கோபோய் முட்டி நிற்கிறது. உதவுவதாகச் சொன்ன வாக்குறுதிகள் வெறும் பேச்சாக மட்டும் நிற்கிறது. மின்தமிழ் மட்டுமல்ல,மிகச் சமீபத்தில் கூகிள் ப்ளஸ்சில் ஏராளமான உதவுவதாகச் சொன்னவைகள் கூட வெறும் பேச்சாக மட்டுமே நிற்கின்றன.

  ஆனால், எதிர்பாராத இடங்களில் இருந்து உதவிகள் சிறுகச் சிறுக வர ஆரம்பித்திருக்கின்றன என்பது ஆறுதலளிக்கும் செய்தி. நம்மைச் சுற்றியுள்ளவைகளிடமிருந்து இலவசமாக நிறைய விஷயங்களைப் பெற்றுக் கொள்கிறோம்,ஆனால் திருப்பி எதையும் கொடுப்பதில்லை.

  நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வார்த்தைகள் உண்மையாக வேண்டுமானால், நாமும் கொஞ்சம் திருப்பிக் கொடுக்க வேண்டும் அல்லவா? இதைப் புரிந்துகொள்ளும் நாளே தமிழர்களின் விடியல்நாள் என்று எனக்குப் படுகிறது! என்ன சொல்கிறீர்கள்?

  ReplyDelete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. // வட அமெரிக்க FETNA வின் தென்றல் இதழைக்கூட நான் படித்திருக்கிறேன்.//

  தென்றல் Fetnaவின் இதழ் அல்ல நண்பரே!

  ReplyDelete
 5. திரு அரவிந்த்!

  பதிவர் சுரேகாவின் ஞானாலயா குறித்து இரண்டேகால் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியதை, ஞானாலயா குறித்த செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்து வைக்கிற முயற்சியாக மீள்பதிவு செய்திருக்கிறோம். பதிவில் இருந்த பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. ஐந்தாண்டுகளுக்கு முன் தென்றல் இணைய இதழில் வெளிவந்த ஞானாலயா திரு பா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய நேர்காணல் ஒன்று கூட இந்தப் பக்கங்களில் பகிரப் பட்டிருக்கிறது.

  ஞானாலயாவுக்கு உங்களால் என்ன வகையில் உதவ முடியும் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்!உங்களால் முடிந்த நிதி என்பதைத் தவிர, உங்களுடைய நண்பர்களுக்கு, உங்கள் பதவிப் படிக்க வருகிறவர்களுக்கு, உதவக்கூடிய மனம் படைத்தவர்கள் என்று நீங்கள் நினிக்கும் சிலரிடம், ஞானாலயா குறித்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள முடியுமானால், மிகப் பெரிய உதவியாக இருக்கும்! செய்வீர்களா?

  ReplyDelete

புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்தை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொடர்ந்து புதிய இடுகைகளைப் பெற உங்கள் மெயில் முகவரியை arivedeivam@gmail.com க்கு அனுப்பி வையுங்கள்.