Monday, December 17, 2012

நூலகம் என்பது பல்கலைக்கழகமே


உங்களுக்காக தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்கப்பட்டபோது, ‘புத்தகங்களுடன் மகிழ்ச்சி-யாக வாழ்ந்து விட்டு வருவேன்’ என்று பதிலளித்தார் நேரு.

 ‘என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று’ என்றார் பெட்ரண்ட் ரஸல்.

 மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் ‘புத்தகம்’ என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

‘கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும்’ என்றாராம் தந்தை பெரியார்.

 ‘வேறு எந்தச் சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும்’ என்றாராம் நெல்சன் மண்டேலா.

 பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம். இன்று மாஸ்கோ லெனின் நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரியது.

குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்ட போது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்.

 ‘ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான்’ என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ‘ஒரு நூலகம் கட்டுவேன்’ என்று பதிலளித்தாராம் மகாத்மா.

விமானத்தில் போகாமல் பம்பாய்க்கு காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என பதிலளித்தாராம் அறிஞர் அண்ணா.

 பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர் கிங்.

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது... எது நூலகத்திற்கு அருகில் உள்ளது என கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்.
ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.

Monday, December 10, 2012

அக்கறையோடு சேகரித்தார். இன்று உதவுகின்றது


ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணலை இங்கே பதிவு செய்கின்றோம்..

oo

உலகத்தில் உள்ள தமிழர்களைக் கணினி வாயிலாக தமிழ்மொழி, இனம், சமயம்,பண்பாடு,கலாச்சாரம்,வாழ்வியல், வரலாறு தொடர்பான செய்திகளை இந்த தளத்தில் வாயிலாக படிக்கலாம்.


பலதரப்பட்ட புத்தகங்களையும் மின் தொகுப்பாக இந்த தளம் தருகின்றது.

தமிழ் புத்தக அலமாரி.   

பல எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய மின் தொகுப்பு தளம்.

தமிழ்த்தேனி


நன்றி :4 Tamil Media.com

Friday, December 7, 2012

புத்தகங்களைத் தேடி ஒரு பயணம்

தமிழ் அச்சிடல் வரலாறு::


தமிழ் அச்சிடல் அறிமுகமும் வளர்ச்சியும் திருத்தூதுப் பணிக்காக இந்தியா வந்திருந்த சமயப் பரப்புரையாளர்களாலும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் முயற்சிகளாலும் நிகழ்ந்தது.[1] 

இந்த தொடக்க கட்ட வளர்ச்சிக்கு முதன்மையாளர்களாக இயேசு சபை இறைப்பணியாளர்களும் பின்னர் சீர்திருத்தத் திருச்சபையின் போதகர்களும் இந்து அறிஞர்களும் குறிப்பிடப்படுகிறார்கள். 

புதிதாக குடிபுகுந்தவர்கள் உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக தங்கள் சமய போதனைகளை உள்ளூர் மொழிகளில் பரப்ப எடுத்த முயற்சிகள் தென்னிந்தியாவில் நாட்டுமொழிகளில் அச்சிடும் பண்பாட்டை அறிமுகப்படுத்தியது. கிழக்கிந்தியக் கம்பனி வைத்திருந்த தடைகள், காலனித்துவ சூழ்நிலைகள், நடைமுறைச் சிக்கல்கள், கல்வி இல்லாமை, சாதிய ஒடுக்குமுறைகள், அக்கறையின்மை என பல்வேறு காரணங்களால் தமிழ் அச்சுக்கலை மந்தமாகவே வளர்ச்சி பெற்றது.

இதனால் பெருந்தொகை இலக்கியங்கள் பதிக்கப்படாமலேயே அழிந்து போயின. இன்று கிடைக்கும் தமிழ் இலக்கியங்கள் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து பதிக்கப்பட்ட ஆக்கங்கள் ஆகும்.1865 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆங்கில நூலான ”தமிழில் அச்சிடப்பட்ட நூல்களில் வகைப்படுத்தப்பட்ட அட்டவணை” (Classified catalogue of Tamil printed books) 1865 வரை 1755 நூல்கள் தமிழில் அச்சிடப்பட்டதாக கூறுகிறது  முதல் தமிழ் புத்தகம் 1554ஆம் ஆண்டு பெப்ரவரி 11ஆம் நாள் லிசுபனில் வெளியானது. அதை ஆக்கியோர் வின்சென்ட் தெ நாசரெத், ஹோர்கே கார்வாலோ மற்றும் தோமா த குருசு ஆகியோர் ஆவர். இம்மூவரும் தமிழ் அறிந்த இந்தியர்களே என்றும் அவர்களுடைய கிறித்தவப் பெயர்களே நமக்குத் தெரிந்துள்ளன என்றும் அறிஞர் கருதுகின்றனர்.

கார்த்தீயா ஏங் லிங்குவா தமுல் எ போர்த்துகேஸ் (Cartilha ē lingoa Tamul e Portugues) (தமிழில்: "தமிழ் மொழியிலும் போர்த்துகீசியத்திலும் அமைந்த [திருமறைச்] சிற்றேடு") என்னும் தலைப்பில் வெளியான அந்நூலில் தமிழ்ச் சொற்கள் இலத்தீன் எழுத்துக்களில் அச்சுக் கோக்கப்பட்டிருந்தன. இந்த நூல்தான் வரலாற்றிலேயே முதலில் அச்சேற்றப்பட்ட தமிழ் நூல்; ஐரோப்பிய மொழியிலிருந்து முதலில் மொழிபெயர்ப்பான தொடர் பாடம்;

இந்திய மொழியொன்றிலிருந்து ஐரோப்பிய மொழிக்கு எழுத்துமாற்றம் செய்யப்பட்ட முதல் நூல் என்று தமிழறிஞர் கமில் சுவலெபில் குறிப்பிடுகிறார்.  மதுரை போன்ற இடங்களில் செப்புப் பட்டயங்களிலும் கற்களிகளிலும் எழுதப்பட்டுவந்த காலகட்டத்திலேயே இந்தத் தமிழ் அச்சு வெளியீடு நிகழ்ந்தது. 

தமிழில் முதலாவதாக அச்சேறிய இந்தப் புத்தகம் உருசியா (1563), ஆபிரிக்கா (1624) மற்றும் கிரீஸ் (1821) நாட்டு முதல் அச்சிட்ட நூல்களைவிட முந்தையதாக விளங்குகிறது.  சென்னையில் அச்சிடலுக்கு வித்திட்டவர் பர்த்தொலொமேயுஸ் சீகன்பால்க் ஆவார்.

1578ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவில் அச்சு இயந்திரம் நிறுவப்பட்டபோதும் அடுத்து வந்த இறைப்பணியாளர்களின் அக்கறையின்மையாலும், குறிப்பாக ஆங்கில மற்றும் டச்சு ஆதிக்கம் மேலோங்கியதால் போர்த்துகீசியர் வலுவிழந்ததாலும் போர்த்துகீசியரின் அச்சுக் கூடங்களில் தமிழ் அச்சுப் பணி தொடரவில்லை. 

1612ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏறக்குறைய 50-60 ஆண்டுகளாக எந்தத் தமிழ் நூலும் அச்சாகவில்லை என்று தெரிகிறது. போர்த்துகீசிய அரசு ஆணைப்படி இந்திய மொழிகளில் அச்சிடுவது 1640களில் நிறுத்தப்பட்டது. 1649 முதல் 1660 வரை நோபிலியும் மனுவேல் மார்ட்டினும் எழுதிய பல ஆக்கங்கள் அச்சடிக்கப்படாது இருந்தன.

அச்சிட சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை தற்காலிகமாகவே இருந்தன. காட்டாக சீகன்பால்க் நிறுவிய தரங்கம்பாடி அச்சகத்தில் தமிழறிஞர் வீரமாமுனிவரின் இலத்தீன்-கொடுந்தமிழ் இலக்கண நூல் 1739இல் அச்சேறியது. கேரளத்தில் அமைந்த அம்பலக்காடு என்னும் இடத்தில் இயேசு சபையினருக்கு உரித்தான அச்சகத்தில் ஒருசில தமிழ் நூல்கள் 1677-1679 அளவில் அச்சாயின.1835 இல் கிழக்கிந்தியக் கம்பனியின் பதிப்புச் சட்டம் விலக்கப்பட்ட பின் இசுலாமிய தமிழ் நூல்கள் பதிப்புப் பெறுவது முனைப்புப் பெற்றது. அச்சுத் தொழில்நுட்பத்தால் முன்னர் எப்பவும் காட்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இசுலாமிய படைப்பாக்கமும், நூல் பதிப்பும் விரிவு பெற்றது.[24] தமிழ் இசுலாமிய எழுத்தாளர்கள் கணிசமான அரபி மற்றும் பாரசீக சொற்களைப் பயன்படுத்தினர். இதனால் முசுலிம் இல்லாத வாசர்களை எட்டுவது சற்றுக் கடினமாக இருந்தது. மேலும் சிலர் அரபி எழுத்துக்களை தமிழ் எழுதப் பயன்படுத்தினர்.  

வேப்பேரி அச்சகம்: 

குடியேற்றவாத பெருநகரங்களில் அச்சிடுவதைப் பொருத்தமட்டில் சென்னை முதன்மையாக விளங்கியது. கிறித்துவ அறிவு வளர்ச்சிச் சமூகம் (Society for Promoting Christian Knowledge - SPCK) சென்னையின் புறநகர் வேப்பேரியில் 1726ஆம் ஆண்டு பெஞ்சமின் சுல்ட்சால் நிறுவப்பட்டது. இது தரங்கம்பாடியில் இருந்த திருத்தூது மையத்தின் விரிவாக செயல்பட்டது.  

முன்னதாக 1712ஆம் ஆண்டு இவ்வமைப்பு தரங்கம்பாடியில் கொடையாக நல்கியிருந்த தமிழ், தெலுங்கு வரிவுருக்களை தாங்கிய அச்சுப்பொறி அங்கு சீகன்பால்கிற்கு பதிப்பிக்க உதவியாக இருந்தது. இங்கிருந்துதான் மலபாரில் வாழ்கின்ற புற சமயத்தார் குறித்த பொது விவரணம் (A General Description Of Malabar Heathendom), நான்கு நற்செய்திகளும் திருத்தூதர் பணிகள் நூலும் (Four Gospels And Acts), மற்றும் சபிக்கப்பட்ட புற சமயத்தார் (Accursed Heathendom) பதிப்பிக்கப்பட்டன. தவிர 1715ஆம் ஆண்டில் புதிய ஏற்பாட்டின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டது.  

1761ஆம் ஆண்டில் பிரெஞ்சு காலனியாகிய புதுச்சேரியை ஆங்கிலப் படைகள் சேர் எய்ர் கூட் தலைமையில் தாக்கியபோது ஆளுனர் மாளிகையில் இருந்த அச்சுப்பொறியை கைப்பற்றினர்.[19] அப்பொறியின் இயக்குனர் டெலனுடன் அதனைச் சென்னைக்குக் கொண்டு வந்தனர். கிறித்தவ அறிவு வளர்ச்சிச் சமூகத்தின் யோகன் பிலிப் பாப்ரிசியசு செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக கூட்டிற்கு வாக்குறுதி தந்து அச்சுப்பொறியை வேப்பேரிக்கு கொணர்ந்தார்.

1762ஆம் ஆண்டிலேயே சமூகம் நாட்காட்டி யொன்றையும் தமிழ் நூல்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. இது கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களில் வெளியான நூல்களை விட பத்தாண்டுகள் முன்பாகவே வெளியானவையாகும்.* Thanks to WIKIPEDIA*
படங்கள் உதவி - 4 Tamil Media.com

ஞானாலயா திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்காணல்.

Sunday, October 28, 2012

புதுக்கோட்டை ஞானாலயா நூலாலயம்! - விடுதலை தளத்தில்புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வார்த்தைகளில்..

”முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு  நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.
                                                     
நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு  நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல.  சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.”

                                                      *  *  *  *

மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து  வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.

விடுதலை தளத்தில் கட்டுரையின் சாராம்சத்தை படித்தீர்கள். விரிவான கட்டுரைக்கு கிளிக் பண்ணுங்க

Friday, October 26, 2012

ஞானலயாவிற்கான ஸ்கேனர் முயற்சி

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக புதுக்கோட்டையில் ஒரு மருந்துக்கடை வைத்திருக்கும் லேனா என்று அழைக்கப்படும் இந்த நண்பர் ஒரு எளிய ஸ்கேனர் முன் மாதிரியைத் தானே வடிவமைத்திருக்கிறார்.

வெறும் பதினைந்து நாட்களில் ஒரு கார்பென்டரை உதவிக்கு வைத்துக் கொண்டு, திரு.லேனா இந்த முன்மாதிரியை உருவாக்கி இருக்கிறார்.மாதிரி ஸ்கேன்கள் நன்றாக, தெளிவாக இருக்கின்றன. இன்னமும் சில விஷயங்களை இணைக்க வேண்டும்.முக்கியமாக எல்ஈடி லைட்! இப்போது சென்னை மற்றும் பெருநகரங்களில் வாழ்கிற நண்பர்கள் பத்து வாட்ஸ் எல்ஈடி லைட் எங்கே கிடைக்கும், என்ன விலை என்பதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்லி இந்த வேலையில் உதவ முடியும்.


                    (தான் தயாரித்த ஸ்கேனருடன் லேனா ஞானாலயாவில்..)

புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்காக திரு லேனா வடிவமைத்துக் கொடுத்திருக்கிற ஸ்கேனரின் செயல் வடிவம் இது.Flatbed அல்லது V ஷேப் வடிவத்தில் 90-130 டிகிரி வரை சாய்வாக வைத்து ஸ்கேன் செய்யலாம். ஃபோகஸ் செய்வதற்கு உதவியாக உயரம் ஒன்றே முக்கால் அடியில் இருந்து மூன்றடி வரை வைத்துக் கொள்ள முடியும்.இங்கேயே நம்மால் செய்து காட்ட முடியும் என்பதை செயலில் நிரூபித்துக் காட்டியிருக்கும் திரு லேனா அவர்களுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும்!


(ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயா, நூலக உதவியாளர், ஸ்கேனர் உடன்)


புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் உங்கள் உதவிக் கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.நிதி வேண்டும்! நிதி மட்டுமே உதவாது! தகுந்த தொழில்நுட்ப உதவியும், மின்னாக்கம் செய்வதில் ஆர்வத்துடனுதவக் கூடிய நபர்களைப் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் கண்டறிவது, என்று நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. திரு லேனா, ஞானாலயாவுக்கு உதவுவதில் ஒரு முன்னெட்டு என்று சொல்வதை விட, ஒரு புலிப்பாய்ச்சல் என்றே சொல்ல வேண்டும், சாதித்துக் காட்டியிருக்கிறார்! நீங்களும் பங்கெடுத்துச் செய்யலாமே!

Wednesday, October 10, 2012

வரலாற்று நாயகர்!ஜொஹானேஸ் குட்டன்பெர்க்! அச்சு இயந்திரம் உருவான கதை

சென்ற புதன் கிழமை புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தில், ஞ்சைக் கல்லூரி ஒன்றில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில்பயிலும் மாணவர்கள் சிலரைத் தற்செயலாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது ப்ராஜெக்ட் கூடன்பெர்க் தளத்தில் கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளாக, பதிப்புரிமை பிரச்சினை இல்லாமல் பொதுவெளியில் உள்ள சுமார் நாற்பதாயிரம் புத்தகங்கள் எப்படி மின்னாக்கம் செய்யப்பட்டு எல்லோருக்கும் பயன்படுகிற மாதிரி இருக்கிறது என்பதைச் சொன்னபோது  கூடன்பெர்க் என்ற வரலாற்று நாயகரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்க வேண்டும்! 

அந்தக் குறையை நீக்க மாணவன் என்ற வலைத்தளத்தில் நேற்று  ஒரு அருமையான விரிவான பதிவைப்பார்த்தத்தில் அவருடைய அனுமதியோடு இங்கே அந்தப்பதிவைப் பகிர்ந்து கொள்கிறோம்.ஞானாலயா வலைத்தளத்தில், ஞானாலயா ஆய்வு நூலகத்தைக் குறித்த செய்திகளை , நூலகங்கள் வாசிப்பு அனுபவங்களைக் குறித்து எழுத ஆர்வமுள்ள நண்பர்களை வரவேற்கிறோம்

தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவந்த விதத்தை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர் திரு பா கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்வதை இந்தச் சுட்டியில் கேட்கலாம்! அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த ஒலிப்பதிவில் இருக்கின்றன.

Over to மாணவன் சிலம்பு

புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணை திறக்கும் திறவுகோல்கள் என்றார் ஓர் அறிஞர். 
 
பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனித குலத்தின் அறிவு வளர்கிறது ஆற்றல் பெருகுகிறது. புத்தகங்கள் இல்லாத ஒரு உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படி ஒரு காலம் இருந்து வந்தது சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தகங்கள் என்பது ஓர் அறிய பொருளாக இருந்தது. 
 
ஒரு புத்தகத்தில் ஒரு பிரதி மட்டும்தான் இருந்தது. அதுவும் கைகளால் எழுதப்பட்டு செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ள கூடியதாக இருந்தது. அதனைப்பார்த்து ஒரு வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார். செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்கள் வைத்துக்கொள்ள முடியுமா? ஒரு புத்தகத்தை அப்படியே பிரதி எடுத்து பல புத்தகங்களாக உருவாக்கினால் எல்லோராலும் புத்தகங்களை வைத்துக்கொள்ள முடியுமே என்று சிந்தித்தார். சிந்தித்தத்தோடு  நின்று விடாமல் செயலிலும் இறங்கினார். 

தனி ஒரு மனிதனின் வேட்கையாலும், உழைப்பாலும், வியர்வையாலும், விடாமுயற்சியாலும் உலகுக்குக் கிடைத்த அருங்கொடைதான் அச்சு இயந்திரம். இதுவரை நிகழ்த்தப்பட்டிருக்கும் கண்டுபிடிப்புகளில் ஆக பிரசித்தியும், முக்கியத்துவமும் வாய்ந்தது அச்சியந்திரம்தான் என்று பல வரலாற்று வல்லுனர்கள் கூறுகின்றனர் 
 
அவர்களின் கூற்று உண்மையானதுதான். ஏனெனில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் புத்தகங்கள் உருவாகின. நூலகங்கள் பெருமளவில் தோன்றத் தொடங்கின. உலக மக்களுக்கு அறிவையும், தகவலையும் கொண்டு சேர்க்கும் பணி எளிதானது. ஒட்டுமொத்தத்தில் அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஐந்து நூற்றாண்டுகளில் உலகம் பல துறைகளில் அபரிமித வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. அந்த பெருமைக்கு சொந்தக்காரரைத்தான் நாம் சந்திக்கவிருக்கிறோம். அவர் பெயர் ஜோகேன்ஸ் குட்டன்பெர்க் (Johannes Gutenberg). 

சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் என்பதால் குட்டன்பெர்க்கைப் பற்றிய குறிப்புகள் துல்லியமாக தெரியவில்லை. அநேகமாக அவர் 1398-ஆம் ஆண்டு அல்லது 1399-ஆம் ஆண்டு பிறந்தார் என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது. ஜெர்மனியின் Mainz என்ற நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார் குட்டன்பெர்க். ஆரம்பம் முதலே குட்டன்பெர்க்கிற்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால் அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. கைகளால் எழுதப்பட்டவை அவற்றை புத்தகங்கள் என்று சொல்வதை விட Manuscripts அதாவது எழுத்துப்படிவங்கள் என்று சொல்லலாம். அவை கிடைப்பதற்கும் அரிதானவை. அவர் வளர்ந்து வந்த சமயத்தில் புத்தகங்களை அச்சடிக்கும் ஒரு புதிய முறை அறிமுகமானது அது அச்சுப்பால அச்சுமுறை (Block printing). ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாக செதுக்கி எழுத்துகள் எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். பின்னர் அந்த எழுத்துகளில் மை தடவி அவற்றை தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும்.   

இந்த முறையில் ஒரே பக்கத்தைப் பல பிரதிகள் அச்சிடலாம். ஆனால் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகை செய்தாக வேண்டும். அதற்கு அதிக நேரம் பிடிக்கும் அவற்றை வேறு பக்கங்களுக்கும் பயன்படுத்த முடியாது. எனினும் கைகளால் எழுதுவதைக் காட்டிலும் அச்சுப்பால அச்சுமுறை வேகமானதுதான். புதிய முறையில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களையும், எழுத்துப் படிவங்களையும் படிப்பதில் குட்டன்பெர்க்கிற்கு அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவற்றையும் செல்வந்தர்களால்தான் வைத்துக்கொள்ள முடிந்தது. எல்லோரும் வைத்துக்கொண்டு படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கனவு கண்டார். ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையை சுத்தம் செய்து விட்டு அங்கு ரகசியமாக பரிசோதனைகள் செய்யத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார். 


குட்டன்பெர்க் எங்கு செல்கிறார்? என்ன செய்கிறார்? என்பது எவருக்கும் தெரியாது. யார் என்ன சொன்னாலும் நினைத்தாலும் பரவாயில்லை என்று தன்னுடைய ஆராய்ச்சிகளை தொடர்ந்தார். பலமுறை அவர் சோர்ந்தும், ஊக்கமிழந்தும் வீட்டிற்கு திரும்பியிருக்கிறார். ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வியையே சந்தித்தார். கைவசம் இருந்த பணமும் தீர்ந்துவிட்டது. அப்போதுதான் செல்வந்தரான Johann Fust என்பவரின் நட்பு அவருக்கு கிடைத்தது. அச்சியந்திரத்தை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட Fust குட்டன்பெர்க்கிறகு தேவையான பணம் கொடுத்து உதவினார். புதிய உற்சாகத்துடன் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிய குட்டன்பெர்க் பல முயற்சிகளுக்குப் பிறகு 'Movable type' எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு அச்சு என்று உருவாக்கினால் அவற்றை வேண்டிய மாதிரி தேவைகேற்ப மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதை கண்டறிந்தார். பின்னர் பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சு சிறந்தது என்பதையும் கண்டறிந்தார். 

தாம் கண்டுபிடித்த முறையைக் கொண்டு லத்தீன் மொழியில் பைபிளை அச்சடிக்கும் பணியைத் தொடங்கினார். 1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள்  நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் உருவானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. ஒவ்வொன்றும் 300 பக்கங்கள் கொண்டது ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருக்கும். குட்டன்பெர்க் கண்டுபிடித்த அச்சு முறையில் உருவானது என்பதால் அது 'குட்டன்பெர்க் விவிலியம்' (Gutenberg Bible) என்றே அழைக்கப்பட்டது. அந்த முறையில் 200 பிரதிகள் வரை அச்சிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு குறிப்பு கூறுகிறது அவற்றில் தற்பொழுது 22 பிரதிகள் எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிள் புத்தகத்தின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் என்று ஒரு மதிப்பீடு கூறுகிறது.
   

1455-ஆம் ஆண்டில் Bamberg புத்தக சந்தையில் தாம் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 florins-க்கு விற்றார் குட்டன்பெர்க். அது அப்போதைய ஒரு குமாஸ்தாவின் மூன்று ஆண்டு சம்பளத்திற்கு சமம். அனால் கையால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட அது குறைவுதான். இதில் ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால் அந்தக்காலகட்டத்தில் ஒரு பைபிளை கையால் எழுதி முடிக்க ஒருவருக்கு 20 ஆண்டுகள் வரை தேவைப்படுமாம். புத்தக சந்தையில் கிடைத்த பணம் பெரிய தொகை இல்லை என்பதால் தான் கடன் வாங்கிய பணத்தை குட்டன்பெர்க்கால் திருப்பித்தர இயலவில்லை. பொறுமையிழந்த  Fust குட்டன்பெர்க்கின் மீது வழக்குத் தொடர்ந்தார். தனக்கு சேர வேண்டிய பணத்திற்காக நீதிமன்றத்தின் துணையுடன் குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார்.   

உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்தும் அதிலிருந்து எந்தவித பலனையும் பெறாமல் ஏழ்மையில் இறந்து போனார் குட்டன்பெர்க் என்பதுதான் வேதனையான உண்மை. 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் இயற்கை எய்திய அவர் ஒரு  Franciscan தேவலாயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்த தேவலாயம் இரண்டு முறை இடிக்கப்பட்டது இப்போது அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட சரிவரத் தெரியவில்லை. கடந்த 500 ஆண்டுகளில் உலகம் சந்தித்திருக்கும் பல மாற்றங்களுக்கு அடிப்படையான ஒரு கண்டுபிடிப்பு அந்த அச்சு இயந்திரம்தான். புத்தகங்களை விரைவாக பல பிரதிகள் எடுக்க முடியும் என்பதால் உலகம் முழுவதும் புத்தகங்கள் பரவத் தொடங்கின. கிறிஸ்துவ மதத்தில் frattances கிளைகள் உருவானதற்கும் ஒருவகையில் குட்டன்பெர்க்தான் காரணம் என்கின்றனர் வரலாற்று வல்லுனர்கள். ஏனெனில் அதுவரை சமயத்தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழத் தொடங்கியது.  

சிலர் பைபிளின் கருத்துகளை வெவ்வேறு விதமாக புரிந்துகொள்ள முற்பட்ட போது frattances கிளைகள் தோன்றத் தொடங்கின. இதைத்தவிர்த்து இன்னொன்றையும் வரலாறு சுட்டிக்காட்டுகிறது. குட்டன்பெர்க் இயந்திரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத் துறையில் சரி நிகராகவே முன்னேறியிருந்தன. அச்சியந்திரம் வந்த பிறகு அதனை பரவலாக பயன்படுத்தத் தொடங்கிய ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சிக் காணத் தொடங்கியது. ஆனால் பழைய அச்சுப் பாலமுறையையே தொடர்ந்துப் பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது. இந்த ஒரு சான்றே போதும் உலக வரலாற்றில் குட்டன்பெர்க்கின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்ற .


குட்டன்பெர்க்கின் எளிய வாழ்க்கை நமக்கு கூறும் பாடமும் எளிதானதுதான். அவர் பல தோல்விகளை சந்தித்த பிறகுதான் உலகின் ஆக உன்னத கண்டுபிடிப்பை செய்ய முடிந்தது. இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் குட்டன்பெர்க்கிற்குதான் நன்றி சொல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டுபோகாமல் விடாமுயற்சியுடன் தொய்வின்றி தொடருவோருக்குதான் வரலாறும் இடம் தரும் அவர்கள் விரும்பிய வானமும் வசப்படும். 

(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)

: http://urssimbu.blogspot.com/2012/10/johannes-gutenberg-historical-legends.html#ixzz28u0LAZ19

Monday, October 8, 2012

ஞானாலயா ஒரு ஒலிப்பதிவு! முதல் முயற்சி!


றிஞர்களின் அறிஞர் என்று சிறப்பிக்கப்பட்ட திரு மு. அருணாசலத்தின் வெளியிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக இருந்த தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு இரண்டையும் பெருமுயற்சி எடுத்து வெளியிட்ட திரு உல.பாலசுப்ரமணியன், (மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர்) உடன் ஞானாலயா ஆய்வு௮ நூலக நிறுவனர்  திரு பா.கிருஷ்ணமூர்த்தி.  


இந்தச் சுட்டியில் ஞானாலயா கிருஷ்ண மூர்த்தி ஐயா, தமிழில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளிவர ஆரம்பித்தது முதல், தமிழின் ஆரம்பகால நூல்கள், நூலகங்கள், முதற்பதிப்பின் அவசியம், நூலகங்களின் பயன்பாடு, நம்மிடம் வரலாற்றுப் பிரக்ஞை இல்லாத குறை உட்பட நிறைய விஷயங்களை ஒரு அரை மணிநேர ஒலிப்பதிவில் விரிவாகப் பேசுகிறார்.கேட்டு விட்டு, உங்கள் கருத்துக்களை அந்தப்பக்கத்தில் சொல்லுங்கள்!

தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் புத்தகங்களை நேசிக்கிறவர்கள் அவசியம் கேட்க வேண்டிய உரை இது. கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக் கொண்டு கேளுங்கள்.

இந்த ஒலிப்பதிவை அனுப்பி வைத்து உதவிய தஞ்சை பாரத் கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் மாணவர்கள் மணிமாறன் & குழுவினருக்கு நன்றி.

Sunday, October 7, 2012

ஸ்வீடன் கலைஞர்களுக்குப் புரிகிறது! தேடி வந்து கற்றுக் கொண்டு உருவாக்கிய அய்யனார் குதிரை!

..
..
கடந்த புதன்கிழமை, அதாவது மூன்றாம் தேதி திருப்பூர் பதிவர்  ஜோதிஜி புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்துக்கு இரண்டாம் முறையாக வந்தபோது ஞானாலயா ஆய்வு நூலகத்தின் முகப்பில் கம்பீரமாக நிற்கும் ஒரு மண்குதிரையோடு எடுத்துக் கொண்ட படம்!இந்த மண்குதிரைக்கு ஒரு சுவாரசியமான பின்னணி, செய்தி இருக்கிறது.  
புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில், வரப்பூர், மழையூர் பகுதிகளில் (அய்யனார்) குதிரை சிலைகளை சுட்ட மண்ணில் செய்கிற கலைஞர்கள் இருப்பதையும், கால ஓட்டத்தில் அடுத்த தலை முறையினர் வேறு தொழில்களுக்குப் போய்விட, இந்த குதிரை செய்யும் கலை அருகி வருவதை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த மூன்று கலைஞர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.
..
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னால்,புதுக்கோட்டைக்கு வந்து அருகி வரும் இந்தக் கலையைத் தெரிந்து கொள்வதற்காக கரின் டிபெர்க் என்ற பெண் அறுபத்தொன்பது வயதான கலைஞர், வெண்கலத்தில் குதிரைகளை வடிவமைப்பதில் தேர்ச்சியுள்ளவரும் கூட-அகே நோப்ளிங், அவர் மனைவி  ஈவா நோப்ளிங் ஆகிய மூவரும் இங்கே வந்து, மண்குதிரை செய்யும் கலைஞர்களைத் தேடிப் பிடித்து அவர்களிடம் இருந்து மண் குதிரை செய்யும் விதத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.
 ..
 புதுக்கோட்டை, அதன் சுற்று வட்டாரங்களின் வரலாற்றுத் தகவல்களை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி ஐயாவுடைய உதவியும் இந்தக்கலைஞர்களுக்கு இருந்திருக்கிறது என்பதைத்தனியாக சொல்ல வேண்டுமோ? அதன் நினைவாக அந்தப் பெண்மணி வடிவமைத்த டெரகோட்டா  (சுடுமண் சிற்பம்) குதிரை சிலை ஞானாலயாவில் கம்பீரமாக முகப்பில் இருக்கிறது!

முழுச் செய்தியையும் வாசிக்க இங்கே
டெரகோட்டா குதிரை ஞானலயாவுக்கு வந்த கதையையும், திருக்கோகர்ணம் பகுதியைப் பற்றியும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருக்கிறார். நிகழ்காலத்தில் சிவா கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார். 

 

Thursday, September 13, 2012

அறிஞர்களின் அறிஞர் மு.அருணாசலம்!

மு. அருணாசலம் - தமிழ் இசை இலக்கிய, இலக்கண வரலாற்று நூல்கள் 
ஞானாலயாவுக்கு உதவிக்கரங்கள் தேவை என்ற செய்தியை முன்வைத்து கூகிள் ப்ளஸ்சிலும், ஞானாலயாவுக்கான வலைப்பூவிலும் இயங்கி வருகிற இந்த ஐந்து மாதங்களில்,நிறைய அனுபவங்கள், தொடர்புகள்! சென்ற வெள்ளிக்கிழமை (07/09/2012) மதுரை  அமெரிக்கன் கல்லூரியில் கல்லூரித் தமிழ்த்துறையும் சந்தியா பதிப்பகமும் இணைந்து எழுத்தாளர் வண்ணதாசன் தன்னுடைய பதினேழாம் வயதில் (1962 April) எழுத ஆரம்பித்து ஐம்பதாண்டுகள் பூர்த்தியானதற்காக ஒரு விழா எடுத்தார்கள்.அதற்காக மதுரை வந்திருந்த ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி  ஐயா எனக்கு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் திரு உல.பாலசுப்ரமணியன் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்..

பதிப்புத்துறையில் பழம் தின்று கொட்டைபோட்டவர்களே முன்னெடுக்கத்  தயங்கும் ஒரு சாதனையை இந்த இளைஞர் சாதித்திருக்கிறார்!

உண்மை!  அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று கொண்டாடப்படும் திரு மு.அருணாசலம் அவர்களின் படைப்புக்களில்  மிக முக்கியமான நூல்களான தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இரண்டையும் தன்னுடைய சொந்த செலவில் பதிப்பித்திருக்கிறார்.இரண்டு தொகுதிகளும் சேர்ந்து ரூ.1200/-

சென்ற டிசம்பரில், தினமணி ஆசிரியர் இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் எழுதிய இந்தப் புத்தகங்களைக் குறித்த அறிமுகம் இங்கே  

கடந்த பிப்ரவரி மாதம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஹிந்து நாளிதழில் இந்தப் புத்தகங்களுக்கு எழுதிய மதிப்புரை இங்கே  

"அறிஞர் மு.அருணாசலம் பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக வெளியிட்டுப் புகழ்பெற்றவர்.அன்னாரின் நூல்கள் சான்றாதாரங்களாக விளங்கும் தரத்தன.அவர் தமிழிசை இலக்கிய வரலாறு,தமிழிசை இலக்கண வரலாறு என்னும் இருநூல்களை எழுதி வெளியிடாமல் கையெழுத்துப் படியாக வைத்தவண்ணம் இயற்கை எய்தினார்.மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்கள் இந்தக் கையெழுத்துப்படிகளை அரிதின் முயன்று வெளிக்கொண்டு வந்துள்ளார். நூலுருவம் தாங்கியதால் உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்பெற முடியும்.இத்தகு அரிய பணியில் ஈடுபட்ட முனைவர் உல.பாலசுப்பிரமணியன் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறேன்"
என்கிறார் முனைவர் மு. இளங்கோவன் 

அதெல்லாம்  சரி!யார் இந்த மு அருணாசலம்? அறிஞர்களுக்கெல்லாம் அறிஞர் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? 

தினமணி நாளிதழில் மூன்றாண்டுகளுக்கு முன் வெளிவநத ஒரு கட்டுரையில் விரிவாக 

தமிழிசையில் ஆர்வம் கொண்டவர்கள் மற்றும்  ஆராய்ச்சி மாணவர்களுக்கு இந்த நூலைப் பரிந்துரை செய்யுங்கள்! பயன்படுத்துவோருக்கு வாங்கிப் பரிசளியுங்கள்!

தமிழ்ப் பதிப்புலகின் ஆவணக் காப்பகமாக இயங்கிவரும் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம் இதுபோன்ற எத்தனை நூல்களை வாசகருக்கு மிக நெருக்கமாகக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது, எத்தனை அரிய நூல்கள் மறுபதிப்புக் காண உதவியிருக்கிறது என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை!

 


Monday, September 10, 2012

முதற் பதிப்பின் முக்கியத்துவம்

ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார்:
தமிழ் மறுமலர்ச்சிக் கவிஞர்களில் முதல்வரான மகாகவி பாரதியார் 1908 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் நாள் ‘ஸ்வதேச கீதங்கள்’ என்ற தமது கவிதை நூலை அவரே வெளியிட்டார். அந்நூலின் 13 ஆம் பக்கம் முதல் 16 ஆம் பக்கம் வரை ‘என் மகன்’ என்ற தலைப்பில் மதுரை ஸ்ரீ முத்துக்குமாரப்பிள்ளை இயற்றிய பாடல்கள், அவரது அனுமதியின் பேரில் பிரசுரிக்கப்பட்டது என்று உள்ளது. ‘‘என் மகன்’’ தலைப்பின்கீழ் (பாரத மாதா சொல்லுதல்) என அடைப்புக்குள் போடப்பட்டுள்ளது. அப்பாடலில் மொத்தம் 43 கண்ணிகள் உள்ளன.

‘‘சந்தோஷம்! இன்றேறுந் தன்னுரிமை வேண்டினையே
வர்தேமா தரந்தனையே வாழத்துவா யென் மகனே!
.........................................................
......................................................... (1)
எனத் தொடங்கி

என்னிடத் திலில்லா இயற்கைப் பொருளெவர்கள்
தன்னிடத்தி லுண்டதனைச் சாற்று வாயென் மகனே!

என அப்பாடல் முடிகிறது.

பாரதியார் கவிதைத் தொகுப்பில் மதுரை முத்துகுமாரப்பிள்ளையின் பாடலா? என்ன ஆச்சரியம்! இது பற்றி என் தந்தையாரிடம் கேட்டபோது அவர் சொன்னார் பாரதி தன் ‘‘ஸ்வதேச கீதங்களை’’ வெளியிடும் முன் ‘நாட்டுப் பற்றையும் மொழிப்பற்றையும் தூண்டும் விதத்தில் அமைந்த பாடல்களை எழுதியவர்கள் அவற்றை தனக்கு அனுப்பினால் தனது கவிதைகளோடு அவற்றையும் சேர்த்து வெளியிடுவதாக விளம்பரம் செய்தார். அதன் விளைவே இப்பாடல். பாரதியின் பரந்த மனத்தையும் உயர்ந்த நோக்கையும் இதன் மூலம் நாம் அறிய முடிகிறது. தனது கவிதா சக்தியில் அவருக்கு எத்துனை தன்னம்பிக்கை!

முதல் பதிப்பில் காணப்படும் இப்பாடல் பின் வந்த அவரது கவிதை பதிப்புகளில் இல்லை.

பாரதியின் கவிதை மண்டலத்தைச் சேர்ந்த புரட்சிக் கவிஞர்  பாரதிதாசன் கவிதைகள் 1938ல் முதலில் வெளிவந்தன. வெளியிட்டவர் குஞ்சிதம் குருசாமி. தனது மகளுக்கு ‘ரஷ்யா’ எனப் பெயர் வைத்த குஞ்சிதம் அப்போது கடலூரில் பணியாற்றி வந்தார். சுயமரியாதை தம்பதியரை நேரில் சந்தித்து வாழ்த்த பாண்டிச்சேரியிலிருந்து பாரதிதாசன் கடலூர் சென்றார். அந்த காலக்கட்டத்தில் தான் பேசும் படங்கள் (சினிமா) திரையிடப்பட்டன. அப்போது வந்த திரைப்படங்களில் எல்லாம் பக்தி,புராணப்பாடல்களே! குஞ்சிதம் தன் மகளை வாழ்த்த வந்த பாவேந்தரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். எங்கு பார்த்தாலும் ஒரே பக்தி புராணப்பாடல்களாகவே உள்ளன. ஆகவே தமிழ் உணர்வை ஊட்டக் கூடிய ஓர் தாலாட்டுப் பாட்டு எழுதித்தாருங்கள் எனக் கேட்டார். தமிழில் தாலாட்ட ஒரு பாடலும் இல்லையே என்றவுடன் பாவேந்தர் அங்கேயே அமர்ந்து எழுதிய பாடல்தான் ‘பெண் குழந்தை தாலாட்டும்’ ‘ஆண்குழந்தை தாலாட்டும்’ என்பதாகும்.

அப்போது பாவேந்தரைப் பார்த்து தங்களின் அற்புதமான கவிதைகளை ஏன் ஓர் கவிதைத் தொகுப்பாக வெளியிடக் கூடாது எனக் குஞ்சிதம் கேட்டபோது ‘எனக்கு வசதி இல்லை’ எனப் பாவேந்தர் மறுமொழி கூற ‘நான் வேண்டுமானால் வெளியிடட்டுமா எனக் குஞ்சிதம் கேட்க’ ‘எனக்கு ஆட்சேபமில்லை’ என்றார் பாவேந்தர். அப்போது கடலூரில் வாழ்ந்த சைவசித்தாந்த பெருமன்றத்தின் செயலர் நாராயணசாமி நாயுடுவின் உதவியை நாடி தன் கருத்தை வெளியிட்டார் குஞ்சிதம். ‘

ஆத்திகப் பெரியார் மனமுவந்து நாத்திகக் கவிஞரின் கவிதைகளை வெளியிட எல்லா உதவிகளையும் செய்தார். பண உதவியும் முழுக்கவே செய்தார். இதை அறிந்த பாவேந்தர் தன் முதல் கவிதை நூலையே அவருக்கு சமர்ப்பணம் செய்தார், காரணம் இருவரையும் பிணைத்தது தமிழ் உணர்வு அல்லவா! சமர்ப்பணப் பாடலில்

நாராயணசாமி நாயுடுகார் அன்னவர்க்கே
என்நூல் சமர்ப்பித்தேன்! இன்றேக்கம் என் நூலைப்
பொன்னுலாய்ச் செய்யும் பொருட்டு

என எழுதியுள்ளார்.

முதல் பதிப்பில் பாவேந்தரின் அபூர்வ படமும் அவரது வாழ்க்கைக் குறிப்பும் உள்ளன. மேலும் சிறப்புரைகள் (1) தோழர் ஈ. வெ. ராமசாமியார் - குடியரசு ஆசிரியர் இரண்டு பக்க முன்னுரை (2) கனம் S. ராமநாதன் B. A. B. L - சென்னை மாகாண விளம்பர இலாகா மந்திரியார் அரை பக்க சிறப்புரை (3) ராமசாமி ஐயங்கார் அவர்கள் பத்திரிகை ஆசிரியர் -மூன்று பக்க பாராட்டுரை இடம் பெற்றுள்ளன.

தற்போதைய பதிப்புகளில் இவைகள் இல்லை. எடுக்கப்பட்டு விட்டன. என்ன காரணம்?

பாவேந்தருக்கு மிகவும் புகழ் சேர்க்கும் அழியாப்புகழை என்றும் தரும் கவிதை நூல் ‘‘அழகின் சிரிப்பு’’ இது உலகம் சுற்றிய தமிழர் A.K. செட்டியார் தூண்டுதலினால் எழுதப்பட்டு அவரது குமரிமலரின் முதல் இதழில் ஏப்ரல் 1943ல் வெளிவந்தது. அழகின் சிரிப்பில் ‘‘சிற்றூர்’’ என்ற தலைப்பில் உள்ள கவிதையில் 5ஆவது விருத்தம்

வெற்றித் தோட்டம் கண்டேன்
மேற்சென்றேன் நான் கடந்து
முற்றிய குலைப் பழத்தை
முதுகினிற் சுமந்து நின்று
வற்றிய மக்காள் வாரீர்
என்றது வாழைத் தோட்டம்
சிற்றேடு கையில் ஏந்தி
ஒரு காணிப் பருத்தி தேற்ற
ஒற்றை ஆள் நீர்இ றைத்தான்
உழைப் பொன்றே செல்வம் என்பான்


‘சிற்றூர் என்ற தலைப்பில் வந்த மொத்த பாடல்கள் பத்து. ஐந்தாவது விருத்தத்தில் 5 அடிகள் உள்ளன. இது யாப்பை மீறியதல்லவா. 4 அடிகள் தானே வரவேண்டும். 1979ல் எங்கள் வீட்டிற்கு A.K. செட்டியார் வந்த போது இதுபற்றி கேட்டேன். அவர் சொன்னார் ‘‘வெளிவந்து 36 ஆண்டுகள் ஆகின்றன. நீதான் முதன் முதலில் இக்கேள்வியைக் கேட்கிறாய் எனக்கூறி விளக்கம் சொன்னார்.’’ கவிஞனின் உணர்ச்சிக்குத் தடைபோட நான் யார்-? அவர் எழுதியதில் கை வைக்க எனக்கு உரிமை இல்லை. ஆகவே அப்படியே போட்டேன்’’ என்றார்.

01.01.1944ல் முல்லை முத்தையா ‘அழகின் சிரிப்பு’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டபோது இவ்வரிகள் இருந்தன. பின் வந்த பதிப்புகளில் முதல் அடி எடுக்கப்பட்டுவிட்டது.

இன்று எல்லோரும் போற்றும் அண்ணா எதையும் ஒரு பின்னனியோடு விரிவாக எழுதி வாசகனை அச்சூழலுக்குத் தயார் செய்து, பொருளுக்கு வருவார். நேரடியாக எதையும் தொடங்கமாட்டார். அண்ணா எழுதிய ‘‘மக்கள் கரமும் மன்னவர் சிரமும்’’ அவர் நடத்திய திராவிட நாடு வார ஏட்டில் தொடராக வந்தது. காஞ்சிபுரத்திலுள்ள ‘பரிமளம் பதிப்பகம்’ 1968ல் அதை நூலாக வெளியிட்டது. அண்ணாவே பதிப்புரை எழுதியுள்ளார். அப்போது அவர் தமிழ் நாட்டின் முதலமைச்சர். நூலின் மொத்த பக்கங்கள் 129. பின்னால் 1981ல் புத்தகமாக வெளிவந்த போது 49 பக்கங்கள் மட்டுமே இருக்கின்றன.  

1969ல் வெளிவந்த முதல் பதிப்பில் 5ஆம் பக்கம் முதல் 77ஆம் பக்கம் வரை இருந்த 73 பக்கங்கள் எடுக்கப்பட்டுவிட்டன. புரட்சி தோன்றக் காரணமும் மக்கள் எழுச்சியும் 77 பக்கங்களில் அண்ணாவால் விரிவாக எழுதப்பட்டு பக்கம் 78ல் புரட்சி வெடித்தது’ எனத் தொடங்கும். இப்போதுள்ள பதிப்புகளில் பக்கம் 78லிருந்து பக்கம் 129 வரை மட்டுமே உள்ளன. அண்ணாவின் நூலுக்கே இக்கதி என்றால் மற்றவர்களின் நூல்கள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

தமிழ்த் தாத்தா எனப் போற்றப்படுபவரும் சங்கத் தமிழ் இலக்கியங்களைக் கண்டெடுத்துப் பதிப்பித்து வழங்கிய வருமான உ.வே.சாமிநாதய்யர் ஐம்பெருங்காப்பியங்களில் முதல் காப்பியமான நூல், சீவக சிந்தாமணியை 1887ல் வெளியிட்டார். மூன்றாவதான மணிமேகலையை 1898 இல் வெளிக் கொணர்ந்தார்.

அந்நூலின் முதல் பக்கத்தில் பாலவனத்தம் ஜமீன்தாரவர்களாகிய இராமநாதபுரம் மகா&-ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ பாண்டித் துரைத் தேவர் அவர்கள் உதவியைக் கொண்டு மேற்படி சாமிநாதய்யரால் சென்னை வெ. நா. ஸ்ரீலிபி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன என்ற விஷயம் அச்சிடப்பட்டு இருக்கும். பொதுவாக அக்காலப் பதிப்புகளில் நூல் எழுத உதவியவர், நூலாசிரியர், அச்சிட்ட அச்சுக்கூடம் ஆண்டு போன்ற விபரங்கள் முதல் பக்கத்திலேயே அச்சாக்கப்பட்டிருக்கும். அதன் மூலமாக அரியபல வரலாற்றுச் செய்திகள் பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அண்மை காலங்களில் இதுபோன்ற விஷயங்கள் அடுத்தமறுபதிப்பில் எடுக்கப்பட்டுவிடுகின்றன.


உ.வே.சா மணிமேகலைக் காவியத்தைப் பதிப்பிக்கும் போது அவருக்கு பல ஐயங்கள் எழுந்தன. பௌத்தம் பற்றிய முழமையான விபரம் தெரியாத காரணத்தால் தன்னுடன் பணியாற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் உதவியை நாடினார். இலண்டன் பாலி மொழிக் கழகத்தோடு தொடர்பு கொண்டு அவர்கள் வெளியிட்ட நூல்களை வருவித்து ஆங்கிலப் பேராசிரியர்களைக் கொண்டு அவற்றை மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டு தன் ஐயங்களைப் போக்கிக் கொண்டார். பின்னர் மணிமேகலையைப் பதிப்பித்தார். பௌத்தம் பற்றிய மூல வரலாறு தனக்குத் தெரியாததால் ஏற்பட்ட இடர்பாடுகளை உணர்ந்த அய்யரவர்கள் வாசகர்களுக்கு உதவும் பொருட்டு ‘‘புத்த சரித்திரம் (48 பக்கங்கள்) பௌத்த தருமம் (39 பக்கங்கள்) பௌத்த சங்கம் (19 பக்கங்கள்) என்ற தலைப்புகளில் மொத்தம் 106 பக்கங்கள் விளக்கங்கள் எழுதியுள்ளார்.

அபிதான விளக்கம் 16 பக்கங்கள், மணிமேகலைக் கதைச் சுருக்கம் 56 பக்கங்கள், மணிமேகலைக் நூலாசிரியர் மதுரைக் கூளவாணிகன் சீத்தலை சாத்தனாருடைய வரலாறு என எல்லாம் எழுதியுள்ளார். ஆனால் தற்போதுள்ள பதிப்புகளில் இவை எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன. தனிநூலாக வெளியிட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். மணிமேகலைக் காவியத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளத்தானே அய்யர் அவற்றை எல்லாம் எழுதினார். எதற்காக அவற்றை எடுக்க வேண்டும். முதல் மூன்று பதிப்புகளில் வந்த இப்பகுதிகளை இப்போது ஏன் நீக்க வேண்டும். ஆகவே முதல் பதிப்பைத் தேட வேண்டியதாகிறது.

இந்தியாவில் அரசோச்சிய ஆங்கிலேயர்கள் 1835ல்தான் அச்சகங்களைத் தொடங்குவதற்கும், புத்தகங்களை வெளியிடுவதற்குமான உரிமையை நம்மவர்களுக்கு அளித்தனர். எனவே தமிழ்நூல் பதிப்பக வரலாற்றுக்கு வயது 177 ஆண்டுகளே ஆகிறது. இக்காலக் கட்டத்தில் வெளிவந்த தினசரி பத்திரிகைகள், வார, மாத இதழ்கள், தனிப்பட்ட நூல்கள் அனைத்தும் கொண்ட நூலகம் ஒன்று இன்றுவரை அமைக்கப்படவில்லை. ஆகவே அத்தகைய நூலகம் ஒன்றை விரைவில் உருவாக்குவது தமிழர்களாகிய நம் அனைவரின் கடமையாகும்.

Credits and Thanks to  Sandhya Publications Website

http://www.sandhyapublications.com/vaasipparai.aspx

Sunday, September 2, 2012

வரலாற்றைப் பேசுதல்!கஞ்சிரா பிறந்த கதை!வரலாறு, வரலாற்றுப் பிரக்ஞை, வரலாற்றைப் பேசுதல் என்றாலேயே நம்மில் பலருக்குக் கொஞ்சம் குழப்பம் வந்து விடுகிறது.இன்றைக்கு நாம் கேள்விப் படும்,வாசிக்கும் வரலாறு குறித்த செய்திகள் அந்த லட்சணத்தில் தான் இருக்கின்றன.இதைத்தான் ஞானாலயா பா.கிருஷ்ண மூர்த்தி ஐயா "தமிழர்கள் வரலாற்று பிரக்ஞை அற்றவர்கள்: அவர்களுக்கு தங்களுடைய பாரம்பரியத்தை , வரலாற்றை அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது " என்று சொல்வதாக இந்தப் பதிவில் நாம் ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம்.

ன்ன தான் சொன்னாலும், வரலாறு, கடந்த நிகழ்வுகள் என்று சொன்ன உடனேயே குழப்பமும் அலட்சியமும், மறதியும் தான் முன்னே வந்து நிற்கிறது! \
ஞ்சிரா! கர்நாடக இசையில் பயன் படுத்தப்படுகிற ஒரு தாள வாத்தியம்! இது உருவாக்கப்பட்டு சுமார் நூற்றைம்பது ஆண்டுகளே ஆகின்றன. கச்சேரிகளில் பயன்பாட்டுக்கு வந்து ஒரு நூற்று முப்பது வருடங்களுக்குள் தான் இருக்கும்..
ஞ்சிராவைப்பற்றி ஹிந்து நாளிதழில் நான்காண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு செய்தி! கஞ்சிராவைப் பற்றிகொஞ்சம் மேலோட்டமாகப் பேசப் பட்டிருக்கிறதே தவிர  சரியான தகவல்கள் இல்லை. இந்த செய்தியின் கடைசி வரிகளில் பலாமரத்தில் செய்யப்படுவது, தோல் என்று மொட்டையாக இருக்கிறது. சரி! கட்டற்ற தகவல் களஞ்சியம் என்று சொல்லிக் கொள்கிறார்களே, அந்த விக்கி பக்கங்களில் போய்க் கஞ்சிரா பற்றிய தகவல்களைத் தேடினால்,உடும்புத்தோல் பயன் படுத்தப்படுவது பற்றிய விவரம் கிடைக்கிறது.அதோடு சரி! மேலதிக விவரங்களோ, முழுமையாகவோ இந்தத்தளமும் இல்லை.

ன்னை  கஞ்சிரா மாஸ்ட்ரோ என்று அழைத்துக் கொள்கிற ஒரு கலைஞர்  இவர்!  இவருடைய வலைப்பக்கத்திலாவது கஞ்சிராவைப்பற்றி கொஞ்சம் முழுமையான தகவல் இருக்கிறதா என்று தேடினால் அதிலும் ஏமாற்றமே!

1850 களில் புதுக்கோட்டை சமஸ்தானத்தை மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். மாண் பூண்டியா பிள்ளை என்ற இளைஞர் வேலை எதுவுமில்லாமல் இருந்தார். அரண்மனை வைத்தியராக இருந்த யோகானந்த சுவாமிகள் என்பவர், மாண் பூண்டியா பிள்ளையை மன்னரிடம் அழைத்துச் சென்று ஏதாவது வேலை கொடுக்குமாறு வேண்டினார். இளைஞருக்கு நகரில் லாந்தர் விளக்கேற்றும் வேலை தரப்பட்டது.

கீழ மேல் தென்வடலாக  நான்கு அடுக்கு வீதிகள் இருந்த நகரம் புதுக்கோட்டை. ஒரு தெருவுக்கு ஆறு லாந்தர் விளக்குகள், ஆக மொத்தம் 96 விளக்குகள். மாண் பூண்டியா பிள்ளை ஒரு கையில் மண்ணெண்ணெய் டின், இன்னொரு கையில் பெரிய திரி போட்ட தீவட்டித் தடியுடன் தொழில் சார்த்திக் கொண்டு ஒவ்வொரு வீதி விளக்காக ஏற்றிக் கொண்டே செல்வார். அப்படிச் செல்கிற சமயங்களில் தீவட்டித் தடியில் தாளம் போட்டபடியே போவது வழக்கம். இதை யோகானந்த சுவாமிகள் கவனித்திருக்கிறார். அகமுடையார் குலத்தில் பிறந்து, சங்கீதத்தில் இத்தனை ஆர்வமா என்று வியந்து, மாண் பூண்டியா பிள்ளையை, பகலில் சும்மா இருக்கும் நேரத்தில் வித்தை பழகட்டும் என்று அரண்மனை தவில் வித்வான் மாரியப்ப பிள்ளையிடம் சேர்த்து விட்டார்..லாந்தர் ஏற்றும் பணியில் சேர்ந்த தவில் வாசிப்பை முறையாகப் பயின்று, அரண்மனையிலேயே தவில் வித்வானாகவும் ஆகிப் போனார்.

ட்சிணாமூர்த்திப் பிள்ளை என்று ஒரு  சமஸ்தானத்துப் பட்டாளத்துக்காரர்! துப்பாக்கிக் கட்டைகளைத் துடைக்கிறேன் பேர்வழி என்று துப்பாக்கிக் கட்டைகளை வைத்துத் தாளம் போட்டே பலதுப்பாக்கிகளை உடைத்தவர். இந்த மாதிரி ஆசாமிக்குப் பட்டாளத்து வேலை ஒத்து வராது என்பதைக் கவனித்த யோகானந்த சுவாமிகள், இவரை மாண் பூண்டியா பிள்ளையிடம் ஒப்படைத்து இசையைக் கற்றுக் கொடு என்று சேர்க்கிறார். மிருதங்க வித்வானாக தட்சிணாமூர்த்திப் பிள்ளை மிளிர வேண்டும் என்று இரவு பகல் சாதகம் செய்து கொண்டிருந்த நேரத்தில் இவர்களோடு பழனி முத்தையா பிள்ளை என்பவரும் சேர்ந்து கொள்கிறார்.

ந்த மூவரும் ஏட்டுக் கல்வி கற்றவர்கள் அல்ல.மிருதங்க வாசிப்பிலேயே அத்தனை தாளக் கட்டுக்களையும் படித்தார்கள். அடப்பன்வயலிலுள்ள மாந்தோப்பில் மூவரும் சேர்ந்து கூழாங்கற்களை வைத்துக் கணக்கிட்டு கோர்வைகள், ஓசைக் குறிப்போடு கூடிய சொற்கட்டுகள், தாள வரிசை வகைப்பாடுகள் என்று அத்தனையையும் பயிற்சி செய்தே கரைத்துக் குடித்தார்கள்.

ப்படி சாதகம் செய்து கொண்டிருந்த நாட்களிலேயே மாண் பூண்டியா பிள்ளைக்குப் புதிய வகை தாளக் கருவி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தீவீரமாக இருந்தது.எடுத்துச் செல்ல இலகுவாகவும், இசைக் கச்சேரிகளில் அதற்கு முக்கிய பங்கும் இருக்க வேண்டும் என்று பல்வேறு தாள இசைக் கருவிகளை ஒப்பு நோக்கித் தேட ஆரம்பித்தார்.நாகூர் பக்கிரிமார்கள் பயன்படுத்தி வந்த டேப் அவரை மிகவும் கவர்ந்தது.தவில், கடம், மிருதங்கம் போல இதை இருகரங்களையும் பயன்படுத்தி  இசைக்க வேண்டியதில்லை.ஆனால், டேப் வடிவம் பெரியது. வட்டவடிவக் கட்டையில் பதினோரு இடங்களில் துளையிட்டு வட்டவடிவிலான பித்தளை அல்லது இரும்புத்தகடுகளை துவாரமிட்டுப் பொருத்தியிருப்பார்கள்.ஒரு புறத்தில் ஆட்டு சவ்வுத்தோலை இறுக்கி ஒட்டியிருப்பார்கள்.

வ்வளவு பெரிதாக வேண்டாமே என்று யோசித்து தாழம்புதரில் நல்ல பருமனான கட்டையை வெட்டி ஒரு அடிக்கும் குறைவான வட்ட வடிவத்தில் ஆறுவிரற் கடையளவு தடிமனாகவும் சக்கரவடிவில் ஒழுங்கு படுத்திக் கொண்டு முதலில் மாட்டுத் தோலைப் பயன்படுத்திப் பார்த்தார்கள். ஒலி திருப்தி தரவில்லை. ஆட்டுத்தோலை  மாற்றிப் பார்த்தும் பிரயோசனமில்லை. இப்படிப் பரிசோதித்துக் கொண்டு இருந்த தருணத்தில் ஒரு ஆண் உடும்பு தன்ஜோடியுடன் ஓடிய போது புதர், கூழாங்கற்களில் அவை செல்லுமிடத்து ஒருவகையான நாதம் வருவதைக் கண்டார்கள். உடும்பை பிடித்து வைத்து, முதலில் ஆண் உடும்பின் முதுகுத்தோலைப் பாடம் செய்ததில்  எழுந்த நாதம் திருப்தியாக இருந்தாலும், முதுகுத்தோல் என்பதால் தடிமனாக இருந்தது. பெண் உடும்பின் வயிற்றுப் பகுதித்தோலைப் பாடம் செய்து பயன்படுத்திப் பார்த்ததில், எழுந்த நாதம் கம்பீரமாக இருந்தது!

தாழங்கட்டைக்குப் பதிலாக பலாக் கட்டையையும், ஆறு இடங்களில் துளையிட்டு காலணாக் காசுகளை ஜால்ராக்களாக வைத்திருந்ததை மாற்றி மூன்றே துளைகள், ஜால்ராக்கள் என வடிவமைத்து உருவானது தான் இப்போது கஞ்சிரா என்றழைக்கப்படும் இசைக்கருவி!

ஞானாலயா பா கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டையின் இசை மரபை அறிமுகம் செய்து வைத்து, யோகானந்த சுவாமிகளின் பேரன் திரு செல்லையா பிள்ளை மற்றும் கஞ்சிரா இசைக் கலைஞர் ராம் இருவரையும் காக்கைச் சிறகினிலே மாத இதழுக்காகக் கொடுத்த ஒரு நேர்காணலின் சுருக்கம் இது!  காக்கைச் சிறகினிலே மாத இதழின் டிசம்பர் 2011 இதழில் வெளிவந்த இந்த நேர்காணலை இங்கே முழுமையாகப் படிக்கலாம்!

காக்கைச் சிறகினிலே திரு வி முத்தையா அவர்களை வெளியிடுபவர், ஆசிரியராகவும், இதழாசிரியராக வைகறையையும் கொண்டு சென்னையில் இருந்து வெளிவருகிறது.

தனி இதழ்  ரூ.20  ஆண்டு சந்தா ரூ.225

தொடர்பு முகவரி:

காக்கை,
அறை எண் : 7, முதல் தளம், நோபிள் மேன்ஷன்,
288, டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி

சென்னை 600 005மின்னஞ்சல் :
saalaramvaigarai@gmail.com

Saturday, September 1, 2012

வரலாற்றைப் பேசுதல்!தியாகி எஸ் சத்திய மூர்த்தி!

..


தீரர் சத்திய மூர்த்தி நினைவாக சென்ற மாதம் ஆகஸ்ட் பதினேழாம் தேதி புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வரலாற்றுப் பேரவையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ஞானாலயா திரு பா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் 
தியாகி சத்திய மூர்த்தியின் 125 ஆவது பிறந்த தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வு இது.

                                                      ..

Wednesday, August 8, 2012

இந்த வாரம் கலாரசிகன்...!ழைய புத்தகக் கடைகளும், பழைய நூலகங்களும் என்னை ஈர்க்கும் காந்தங்கள். நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் திருவனந்தபுரம் மத்திய நூலகத்துக்குச் சென்று, அடுக்கி வைக்கப்பட்டிருந்த சில பழைய தமிழ்ப் புத்தகங்களைத் தூசு தட்டிப் புரட்டிக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தேன்.

திருவிதாங்கூரை ஆண்ட சுவாதித் திருநாள் மகாராஜாவால் 1829-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தத் திருவனந்தபுரம் மத்திய நூலகம்தான் இந்தியாவில் அமைந்த முதல் பொது நூலகம். கர்நாடக சங்கீத விற்பன்னராகவும், பல சாகித்யங்களை இயற்றிய புலவராகவும் இருந்த சுவாதித் திருநாள் மகாராஜா இந்த நூலகத்தை உருவாக்கும் பொறுப்பை கர்னல் எட்வர்ட் காடகன் என்கிற பிரிட்டிஷ் தூதுவரிடம் ஒப்படைத்தார். அதுமட்டுமல்ல, மகாராஜா இந்த நூலகத்துக்கு வைத்த பெயர் திருவனந்தபுரம் மக்கள் நூலகம் என்பது.

ந்த நூலகத்தில் ஜெர்மானியர் ஒருவரைத் தற்செயலாக சந்தித்தேன். இளைஞனான எனக்கு ஓர் அந்நிய நாட்டவர் இந்திய நூலகத்தில் ஆர்வமுடன் பல விஷயங்களைத் தேடிக் கொண்டிருந்தது வியப்பாக இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுத்து அவருக்கு நெருக்கமானேன். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வு என்பதால் எனக்கு அவரது பெயர் நினைவில் இல்லை. அந்தத் தொடர்பு அத்துடன் முறிந்து விட்டதும் ஒரு காரணம்.

ந்த ஜெர்மானியர் சொன்ன ஒரு செய்தி எனது மனதில் பதிந்தது. இன்றுவரை உறுத்திக்கொண்டும் இருக்கிறது. அது- "இந்தியர்கள் உலகிலேயே மிகவும் புத்திசாலிகளாகவும், அறிஞர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தங்களது கண்டு பிடிப்புகளையும், சாதனைகளையும், பேரறிவையும் ஆவணப் படுத்தாமல் விட்டு விட்டார்கள். குறைந்தபட்சம், ஓலைச் சுவடிகளையாவது பராமரித்துப் பாதுகாத்தார்களா என்றால் இல்லை. அதனால்தான், இந்தியர்கள் பின்தங்கிவிட்டனர்!''

வ்வளவு பெரிய உண்மை! இதை நான் நூலகங்களுக்குப் போகும் போதெல்லாம் நினைத்து வேதனைப்படுவேன். நல்லவேளை, தமிழ்த் தாத்தா உ.வே.சா. முனைப்புடன் செயல்பட்டிருக்கா விட்டால் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் செவ்விலக்கியங்கள்கூடக் கிடைக்காமல் போயிருக்கும் என்பதை எப்படி மறக்க முடியும்? 

இனியாவது அந்தத் தவறைச் செய்யாமல், நம்மிடம் இருக்கும் அரிய நூல்களையும், தகவல்களையும், ஓலைச்சுவடிகளையும் ஆவணப் படுத்துவோமா என்றால், உற்சாகமாக "ஆமாம்' என்று சொல்ல இயலவில்லை.

ந்தச் சூழ்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தில் சுவடி மற்றும் நூல் பாதுகாப்பாளராகவும், நூலகராகவும் பணியாற்றும் முனைவர் ப.பெருமாள், சுவடிப் பாதுகாப்பு வரலாறு என்று ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டிருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

னக்குத் தெரிந்த, தான் அனுபவத்தால் கற்ற வித்தைகள், வருங்கால சந்ததியினருக்கும், தனக்குப் பின்னால் உருவாகப் போகும் நூலகர்களுக்கும் பயன்பட வேண்டும் என்கிற அவரது உயரிய நோக்கத்திற்காகவே முனைவர் பெருமாளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ரிஸ்டாடில் கி.மு. 335-இல் எழுதிய "ஹிஸ்டரியோ அனிமலியம்' என்ற நூலில் புத்தகங்களின் மீது வாலில்லாத தேள் போன்ற பூச்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிடுகின்றார். புத்தகம் என்று அவர் குறிப்பிடுவது ஓலைச்சுவடிகளாகத்தான் இருக்க வேண்டும். இந்தியா போன்ற வெப்ப நாடுகளில் புத்தகப் புழு, வெள்ளி மீன், கறையான், புத்தகப் பேன் போன்ற பூச்சிகளினால் காகிதச் சுவடிகள் அழிவுக்கு ள்ளாகின்றன. ஓலைச் சுவடிகள் புத்தகப் புழு, கரப்பான் பூச்சி மற்றும் கறையான்களால் அழிவுக்குள்ளாகின்றன'' என்று பதிவு செய்யும் முனைவர் பெருமாள், ஓலைச்சுவடிகள் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து அளிக்கிறார்.

சுவடிகள் நம் சமூக வரலாற்றைப் பாதுகாத்த பெட்டகம். சுவடிகளைப் பாதுகாப்பது நமது வரலாற்றைப் பாதுகாப்பதாகும்' என்கிற கடமை உணர்வுடன் செயல்பட்டு சுவடிகள் பற்றிய அத்தனை விவரங்களையும், சுவடிப் பாதுகாப்பு பற்றிய எல்லா அம்சங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார் முனைவர் பெருமாள்.

வ்வொரு பல்கலைக்கழகமும், ஒவ்வொரு தமிழ் அமைப்பும் முனைவர் ப.பெருமாளை அழைத்து கெüரவிக்க வேண்டும் என்பது எனது வேண்டு கோள். இவரைப் போலத் தனக்குத் தெரிந்தது வருங்கால சந்ததியருக்கும் தெரிய வேண்டும் என்று நமது முன்னோர்கள் நினைக்காததாலும், ஆவணப் படுத்தப்பட்ட அரிய பல விஷயங்களைப் பாதுகாக்கத் தவறியதாலும்தானே நாம் நமது சரித்திரத்தையும் சாதனைகளையும் நிலைநிறுத்த முடியாமல் தவிக்கிறோம்.

முனைவர் ப.பெருமாளுக்கும், அவரது புத்தகத்தைப் பதிப்பித்து வெளியிட்ட காரைக்குடி கோவிலூர் மடாலயத்துக்கும் தமிழ்கூறு நல்லுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது!

--------------------------------------------------------------------------------------------------------------------

கடந்த ஞாயிறு அன்று (05-08-2012) இந்த வாரம் கலாரசிகன் பகுதியில் தினமணி ஆசிரியர் எழுதிய கட்டுரையின் முழுவடிவமும் இங்கே!

இந்தப் பத்தியில் ஓலைச்சுவடிகளைக் குறித்துச் சொல்லியிருப்பது, ஞானாலயா ஆய்வு நூலகத்தில் இருக்கும் அரிய புத்தக சேகரத்துக்கும் அப்படியே பொருந்துகிறதே!வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆவணப் படுத்துகிற வேலை நம் முன்னால் காத்திருக்கிறது.


ஞானாலயா உங்கள் உதவிக்கரங்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது! வாருங்கள்! கை கொடுங்கள்!
..